No products in the cart.
Mar 18 – மீதியான துணிக்கைகள்!
“ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள் என்றார்” (யோவான் 6:12).
கர்த்தர் பசியோடிருந்த மக்களுக்கு அற்புதமான உணவை கொடுத்தார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து ஆசீர்வதித்தபோது, ஐயாயிரம் பேரும் உணவு அருந்தினார்கள். அதுவும் எந்த அளவுக்கு ஆண்டவர் அவர்களுக்கு கொடுத்தார் தெரியுமா? வேதம் சொல்லுகிறது, “வேண்டிய மட்டும் கொடுத்தார்” (யோவா. 6:11).
இயேசுகிறிஸ்து மீதியானதை தூக்கியெறிந்துவிடவில்லை. ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள் என்றார். அவர் மீதியிலும் கவனமுள்ளவர். அப்படி அவர்கள் மீதியானவைகளை சேர்த்த போது, பன்னிரண்டு கூடைகள் நிறைய நிரப்பினார்கள். அது பத்து கூடையாக இருந்திருக்கலாம் அல்லது பதினைந்து கூடையாக இருந்திருக்கலாம். ஆனால் சரியாக பன்னிரண்டு கூடைகள் என்று அங்கே எழுதப்பட்டிருக்கிறது. ஏன் பன்னிரண்டு கூடைகள்? சீஷர்களின் எண்ணிக்கையே இதற்குக் காரணம்.
கிராமங்களிலே ஆவிக்குரிய கன்வென்ஷன் கூட்டங்கள் நடைபெறும்போது, கூட்டம் முடிந்ததும் எல்லாருக்கும் உணவு வழங்குவார்கள். அப்பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வேலைகளில் பந்தி பரிமாறுகிற வேலையே மிகவும் கடினமானதாய் இருக்கும். அத்தனை பேருக்கும், குனிந்து குனிந்து பரிமாறும்போது, அவர்கள் முதுகெல்லாம் வலிக்க ஆரம்பித்துவிடும். இரண்டு மூன்று பந்தி பரிமாறிவிட்டு, பல மணி நேரங்கள் முதுகு வலியினால் கஷ்டப்படுவார்கள்.
அன்றைக்கு இயேசு ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு போஷித்தபோது, பந்தி பரிமாறினது சீஷர்கள்தான். வேதம் சொல்லுகிறது, “இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்” (யோவான் 6:11).
ஐயாயிரம் பேருக்கு பந்தி பரிமாறும்போது, சீஷர்கள் அதிகமாய் களைத்துப் போயிருந்திருக்கக்கூடும். ஆகவே கர்த்தர் சீஷர்களுக்கு ஒரு அதிகமான பரிசைக் கொடுக்க விரும்பியிருக்கலாம். ஆகவேதான், பன்னிரண்டு கூடைகளிலே மீதியான யாவற்றையும் நிரப்பினார்கள். ஆளுக்கொரு கூடையை எடுத்து தங்கள் தங்கள் வீடுகளுக்கு கொண்டுபோய் சொந்தக்காரர்கள், இனத்தவர்களுக்கெல்லாம் பரிமாறி இயேசு செய்த அற்புதங்களையெல்லாம் வர்ணித்து கூறியிருந்திருப்பார்கள். அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களுக்கு அதிகப்படியான ஆசீர்வாதங்களுண்டு.
மீதியான துணிக்கைகளெல்லாம் கர்த்தர் செய்த நன்மையை நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. ஒருவன் எனக்கு ஊழியம் செய்வானானால் பிதாவானவர் அவனைக் கனப்படுத்துவார் என்னும் வாக்கை உணர்த்துகின்றன. அன்று ஐந்து அப்பம் இருந்ததுபோல, இயேசுவினுடைய சரீரத்தில் இன்றைக்கு ஐந்து காயங்கள் இருக்கின்றன. இந்த காயங்களிலிருந்து வருகிற இரட்சிப்பு என்கிற ஆசீர்வாதத்தை, உலகத்தின் மக்களுக்கு வேண்டிய மட்டும் அவர் தருகிறார். நினைவிற்கு:- “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்” (யோவான் 6:51).