No products in the cart.
Mar 16 – மாறுபாடும், உத்தமமும்!
“உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்” (நீதி. 28:18).
வேதத்திலுள்ள அநேக பரிசுத்தவான்கள் உத்தமமாய் ஜீவித்ததினால் கர்த்தரிடத்திலும், ஜனங்களிடத்திலும் நற்சாட்சி பெற்றார்கள். உத்தமத்திற்கு எதிர்மறையான குணாதிசயம் பொய்யும் புரட்டுமாகும். “ஒருவன் சிலரை ஏமாற்றலாம்; சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது” என்னும் ஒரு பழமொழி உண்டு. “பொய்யின் கால்கள் குள்ளமான கால்கள்” நீண்ட தூரம் அதினால் ஓட முடியாது.
இயேசு சொன்னார், “வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை” (மத்.10:26). ஆம். பொய்யும் புரட்டும் ஒருநாள் வெளியரங்கமாகும்போது, அது எத்தனை அவமானத்தைக் கொண்டு வரும்!
வேதம் சொல்லுகிறது, “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம் மாற அவர் ஒரு மனுப்புத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” (எண். 23:19). “சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” (1 யோவான் 2:21). “பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே தள்ளப்படுவார்கள் (வெளி. 21:8).
நீதிமொழிகளின் புஸ்தகம், பொய் நாவுக்கு எதிராக எச்சரிக்கையாயிருப்பதுடன் உத்தமமாய் வாழும்படியும் வலியுறுத்துகிறது. நீங்கள் உத்தமமாய் வாழ்ந்தால் கர்த்தருடைய ஆலயத்தில் தூணாய் நிற்பீர்கள். வேதம் சொல்லுகிறது, “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்” (நீதி. 2:21).
யோபு பக்தனின் உத்தமத்திற்கு எத்தனையோ சோதனைகளும், போராட்டங்களும் வந்தன. பாடுகளின் நேரத்திலே அவருடைய மனைவியே அவரைப் பார்த்து, “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (யோபு 2:9) என்றாள்.
ஆனாலும் யோபு பாவம் செய்யவில்லை. தன்னுடைய உத்தமத்தை விட்டு விலகவுமில்லை. வேதம் சொல்லுகிறது, “உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்” (நீதி. 11:5). “உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்” (நீதி. 11:20). “நீதி உத்தம மார்க்கத்தானைத் தற்காக்கும்” (நீதி. 13:6). நீங்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களுடைய உத்தமத்தை விட்டுவிடாதேயுங்கள். பொய்யையும் புரட்டையும் நினைத்துக்கூட பார்க்காதேயுங்கள். உத்தமமாய் ஜீவிக்கிறவர்களுக்கு கர்த்தர் நீதியை வழங்காதிரார்.
உங்களுடைய உண்மையையும், உத்தமத்தையும் ஜனங்கள் கவனிக்கிறார்கள். முழு பரலோகமும் கவனிக்கிறது. விசேஷமாக கர்த்தர் அதை கவனிக்கிறார். ஒரு நாள் இந்த உலகத்தின் ஓட்டத்தை முடித்து பரலோக ராஜ்யத்திற்கு செல்லும்போது, கர்த்தர் மிகுந்த சந்தோஷத்தோடு உங்களை வரவேற்று, “உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத். 25:21) என்று சொல்லுவார். ஆ! அந்த நாள் எத்தனை பாக்கியமான நாள்!
நினைவிற்கு:- “நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்” (நீதி. 20:7).