AppamAppam - Tamil

Mar 15 – மாறப் பண்ணுவார்!

“உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்” (உபா.23:5).

உலகத்தில், காணப்படுகிற வல்லமைகளுமுண்டு. காணக்கூடாத வல்லமைகளுமுண்டு. இடிமுழக்கத்திற்கு ஒரு வல்லமையிருக்கிறது. மின்னலுக்கு ஒரு வல்லமையிருக்கிறது. மின்சாரத்திற்கு ஒரு வல்லமையிருக்கிறது. கடலின் அலைகளுக்கு ஒரு வல்லமையிருக்கிறது. இவைகளெல்லாம் காணக்கூடிய வல்லமைகள். ஆனால் காணக்கூடாத வல்லமைகளும் இருக்கின்றன. அவற்றில் கொடிய வல்லமை சாபத்தின் வல்லமை. மனிதனுடைய கண்களுக்கு அது தெரிவதில்லை. எவ்வளவு சாபங்கள் இருக்கின்றன என்று அளக்க முடிவதில்லை. நோய்களின் கொடுமைகளையெல்லாம் பல்வேறு அளவுகோல்களினால் அளக்க முடியும். ஆனால் சாபத்தின் அளவை அளக்க முடியுமா? இந்த சாபங்கள் எப்படி வந்தன என்பதையும் தெரிந்துகொள்ள முடிவதுமில்லை.

திடீரென்று வீட்டில் விபத்துக்களும், வியாதிகளும், வரும்போதும், அகால மரணங்கள் ஏற்படும்போதும், பிள்ளைகளுடைய எதிர்காலம் பாதிக்கப்படும்போதும், குடும்பத்தில் சத்துருவின் போராட்டம் மிகும்போதும் சாபங்கள் அந்த வீட்டில் வந்திருக்கிறதைக் காணமுடிகிறது. கர்த்தரிடத்திலிருந்து வருகிற சாபங்களுமுண்டு. அவை நியாயப்பிரமாணத்தை மீறுகிறதினால் வருகிறவை. மனுஷரால் வருகிற சாபங்களுண்டு. தங்கள் மேல் தாங்களே சுமத்திக் கொள்ளுகிற சாபங்களுமுண்டு.

இயேசுவை நோக்கிப் பாருங்கள்! அவர் சாபத்தை ஆசீர்வாதமாய் மாறப் பண்ணுகிறவர். உங்களுடைய குடும்பத்திலும்கூட எந்தவிதமான சாபங்கள் மோதிக்கொண்டிருந்தாலும் அவரை நோக்கிப் பார்த்து ‘அப்பா இந்த சாபத்தை எல்லாம் எனக்கு ஆசீர்வாதமாய் மாற்றும்’ என்று கெஞ்சும்போது, அவர் நிச்சயமாகவே அந்த சாபங்களை மாற்றி ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.

கர்த்தருக்கு சாபத்தை மாற்றுகிற வல்லமையிருக்கிறது. மனுஷர் காரணமில்லாமல் உங்களைச் சபிக்கும்போது, கர்த்தர் அந்த சாபங்கள் உங்களைத் தாக்காதபடி கேடகமாய் வந்து நின்றருளுவார். ‘காரணமில்லாமல் இடுகிற சாபம் தங்காது’ என்று வேதம் சொல்லுகிறது.

இஸ்ரவேலரை சபிப்பதற்காக பிலேயாம் புறப்பட்டு வந்தான். பிலேயாம் தன்னுடைய பிள்ளைகளை சபிக்கக்கூடாது என்று கர்த்தர் எவ்வளவு முயற்சியெடுத்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். பேசாத கழுதை பேசி, தீர்க்கதரிசியினுடைய மனக்கண்களைத் திறந்தது. கர்த்தர், சபிக்க வந்த பிலேயாமை மாற்றி, இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கும்படி செய்தார். கர்த்தர் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறவர்.

வேதம் சொல்லுகிறது, “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்” (கலா. 3:13). தேவபிள்ளைகளே, இன்று முழங்கால்படியிட்டு கர்த்தர் உங்களுடைய சாபத்தை ஆசீர்வாதமாக்கும்படி ஜெபியுங்கள். நினைவிற்கு:- “இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்” (வெளி.22:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.