AppamAppam - Tamil

Mar 14 – மழையும், கர்த்தருடைய வார்த்தையும்!

“மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்” (ஏசா. 55:10,11).

இந்த வேதப்பகுதியில், “மழையும், கர்த்தருடைய வார்த்தையும்” ஒப்பிடப்பட்டுள்ளன. இது எத்தனை அருமையான உவமை! மழையின் ஆசீர்வாதத்தைப் போல இந்த உலகத்திற்கு வேறு ஒரு பெரிய ஆசீர்வாதம் ஏதேனும் உண்டா?

ஒரு கிராமத்தில் அநேக வருடங்களாக மழையில்லாமல் போனது. விவசாயம் ஒன்றும் நடக்காததினால் பெரும்பாலான ஜனங்கள் ஊரை விட்டு ஓடவேண்டியதாயிற்று. மழை போதுமான அளவுக்கு இருந்திருக்குமானால் கிராமம் செழித்து தளைத்தோங்கி இருந்திருக்கும். சென்னைப் பட்டணத்தில் ஒரு வருஷம் மழை பெய்யாமல் போனால், குடி தண்ணீர் பஞ்சம் பயங்கரமாக தலை விரித்தாடும். வெயில் அகோரமாகிவிடும். ஜனங்கள் வாழ்வது அரிது என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடும்.

கர்த்தர் மாரியையும், மழையையும் கிருபையாக உலகத்திற்கு கொடுத்தது போலவே, வேத வசனங்களை உங்களுக்குக் கொடுத்து, ஞாயிறு ஆராதனைகளில் மழை பொழிவது போல கர்த்தருடைய வார்த்தையை பொழியச் செய்கிறார். அங்கே வாக்குத்தத்த வசனங்களைப் பெற்றுக் கொள்ளுகிறீர்கள். உங்களுடைய உள்ளம் புத்துணர்வு பெறுகிறது.

முதலாவதாக, “ஏற்றக் காலத்திலே மழையைப் பெய்யப் பண்ணுவேன், ஆசீர்வாதமான மழை பெய்யும்” (எசேக். 34:26) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஒவ்வொரு காலத்திலும் கர்த்தர் தீர்க்கதரிசியை எழுப்பி, மழையைப் போல கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்கும்படி செய்கிறார். ஏசாயா தன் காலத்திலே பெரிய தீர்க்கதரிசியாக எழும்பினார். அவருடைய தீர்க்கதரிசனங்களெல்லாம் வாக்குத்தத்த மழையாகவே விளங்கின.

இரண்டாவதாக, மழை பெய்யும்போது அது நிறைவாகப் பொழியும்படி செய்கிறார். மழை பொழிந்து பூமி நனைகிறது. குளங்கள் பெருகுகின்றன. ஆறுகள் வயல் வெளிகளை செழிப்பாக்குகிறது. அதுபோல வேத வசனத்தின் மூலமாக சபைகள் பெருகுகின்றன. ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுகின்றன. எங்கும் எழுப்புதலின் புஷ்பங்கள் காணப்படுகின்றன. கர்த்தருடைய வார்த்தைதான் உயிர் மீட்சியை தேசத்தில் கொண்டு வருகிறது.

 மூன்றாவதாக, மழை பொழியும்போது அது பட்சபாதம் பார்க்காமல் எல்லார் மேலும் ஊற்றப்படுகிறது. வேதம் சொல்லுகிறது, “அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ள வர்கள் மேலும் மழையைப் பெயப் பண்ணுகிறார்” (மத். 5:45). வேத வசனமும் அப்படித்தான். அதை முழு உலகத்திற்கும் கிருபையாக அருளிச் செய்திருக்கிறார். அதை வாசிக்கிற மனுஷன் தேவனை நோக்கிப் பார்ப்பானென்றால் இரட்சிக்கப்படுவான். தேவபிள்ளைகளே, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையும் செழித்தோங்கி வளருவதாக! நினைவிற்கு:- “எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்” (எபி. 6:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.