AppamAppam - Tamil

Mar 12 – மலைகளைப் பேர்க்கும் விசுவாசம்!

“மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவர்களாயிருந்தாலும்..” (1 கொரி. 13:2).

 அப்போஸ்தலனாகிய பவுல், மலைகளைப் பேர்க்கத்தக்கதான விசுவாசத்தைக் குறித்து சொல்லுகிறார். விசுவாசம் மலைகளைப் பெயர்க்கிறது. மலைகளைப் போன்ற தடைகளை அகற்றுகிறது. ஜெயத்தைத் தந்து வெற்றிசிறக்கப் பண்ணுகிறது. உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில், முன்னேற முடியாதபடி குறுக்கே நிற்கும் மலைகள் எதுவானாலும், அதை உங்கள் விசுவாசத்தினால் நிச்சயமாகவே பெயர்க்க முடியும்.

இயேசு சொன்னார்: “தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்” (மாற்கு 11:22,23). இந்த வசனத்தின் சாராம்சம் என்ன? கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருங்கள். நீங்கள் சொல்லுகிறபடியே ஆகும். தடையாகிய மலைகள் பெயர்ந்து தள்ளுண்டுபோம். அந்தத் தடைகளை இனி நீங்கள் காண்பதில்லை.

 பசிபிக் மகாசமுத்திரத்தின் ஆழமானது, உலகத்திலேயே அதிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உயரத்தைவிட அதிகமானது. விசுவாசம் அப்படிப்பட்ட பெரிய மலைகளையே சமுத்திரத்தில் தள்ளிவிடக் கூடியது. இந்த இடத்தில் மலை என்று சொல்லும்போது, எழுத்தின்படியான மலை அல்ல. மலை போன்ற பிரச்சனைகள், மலை போன்ற பாடுகள், மலை போன்று குறுக்கே நிற்கும் போராட்டங்களைக் குறிக்கிறது.

இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையில் அப்படிப்பட்ட பல மலைகள் குறுக்கிட்டன. பார்வோன் பெரிய மலையைப் போல எழுந்தான். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பூசி, விசுவாசத்தினாலே அந்த மலையைச் சிவந்த சமுத்திரத்தில் தள்ளினார்கள். யோர்தான் அவர்களுக்குப் பெரிய மலையைப் போன்று காட்சியளித்தது. விசுவாசத்தினாலே ஆசாரியர்கள் யோர்தானின் தண்ணீரில் கால் வைத்தபோது, அது பின்னிட்டுத் திரும்பி வழி விட்டது. எரிகோ மதில் பெரிய மலையைப்போல அவர்களுக்கு சவால் விடுத்தது. ஆனால் விசுவாசத்தோடு அவர்கள் அதைச் சுற்றி வந்தபோது, அந்த எரிகோ மதில் தகர்ந்து நொறுங்கி விழுந்தது.

அதைப்போல கானானிய குடிகள் எல்லாம் மலையைப் போல இஸ்ரவேலரை எதிர்த்தார்கள். வேதம் சொல்லுகிறது, “அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் புறப்பட்டு வந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல துரத்தினார்கள்” (உபா. 1:44). தேவபிள்ளைகளே, மலைகளைப் போன்ற பெரிய தீய சக்திகள் உங்களைத் துரத்தி வரும்போது, பயப்படாதிருங்கள். மலையில் வாசம் பண்ணின எமோரியரை, கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தார். ஆம், கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார். உங்களுக்காக நிச்சயமாகவே யுத்தம் பண்ணி மலைகளை உருட்டித் தள்ளுவார். நினைவிற்கு:- “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி; பட்சியைப்போல உன் மலைக்கு பறந்து போ என்று சொல்லு கிறீர்கள்” (சங். 11:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.