No products in the cart.
Mar 10 – மனப்பூர்வமாக!
“எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்” (யோவான் 20:23).
மன்னிப்பது தெய்வீக சுபாவம். மன்னிக்காமல் பகையையும், வைராக்கியத்தையும் வைத்துக் கொண்டிருப்பது சாத்தானின் சுபாவம். கிறிஸ்து உங்களை மனப்பூர்வமாக மன்னித்திராதிருந்தால், உங்களைத் தேடி வருவாரா? நீங்கள் அவரை அசட்டை செய்து புறக்கணித்த வேளையிலும்கூட உங்களை மன்னித்து தன் கிருபையை வெளிப்படுத்தச் சித்தமானாரே. வேதம் சொல்லுகிறது, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோம. 5:8).
சிலுவையிலே இயேசுவின் தலையில் முள்முடி சூட்டப்பட்டு, வாரினால் அடிக்கப்பட்டு, ஆணிகளால் கடாவப்பட்டு, மனுஷருடைய எல்லா நிந்தைகளையும் அவமானங்களையும் தன் மேல் ஏற்றுக்கொண்ட வேளையிலும், அவர் உள்ளத்திலிருந்து வெளிவந்தது மன்னிக்கிற அன்புதான். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்” (லூக். 23:34). சிலுவையில் அவரை கொடுமைப்படுத்தினவர்களையே அவரால் மன்னிக்க முடியுமானால், அவரண்டை வருகிற ஒவ்வொருவரையும் மன்னிக்க அவரால் கூடும்.
மன்னிப்பது என்றால் எத்தனை முறை மன்னிப்பது? திரும்பத் திரும்ப மன்னித்துக்கொண்டேயிருந்தால் மன்னிப்புக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுமே என்று ஒருவேளை நீங்கள் எண்ணலாம். பேதுரு இயேசுவைப் பார்த்து ‘நான் என் சகோதரனுக்கு எத்தனை முறை மன்னிக்கவேண்டும்’ என்று கேட்டார். ஏழு தரம் மன்னித்தால் போதும் என்பது அவனுடைய எண்ணமாயிருந்தது. ஏழு என்பது பூரணத்தைக் குறிக்கிறது அல்லவா? ஏழு முறை மன்னித்துவிட்டேன் என்பது, பூரண மன்னிப்பைக் கொடுத்துவிட்டேன் என்ற அர்த்தத்தைக் தருகிறது. எட்டாவது முறை மன்னிக்கவேண்டிய அவசியமில்லை என்பதே அவருடைய எண்ணம்.
ஆனால் இயேசு சொன்ன பதில் என்ன? ‘ஏழு எழுபது முறை நீங்கள் மன்னிக்கவேண்டும்’ என்பதே. இயேசு ஏழு எழுபது லட்சம் முறை என்றாலும் மன்னிக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். மனப்பூர்வமாய் கண்ணீரோடு, மெய் மனஸ்தாபத்தோடு ஒரு பாவி கர்த்தரண்டை திரும்பும்போது கர்த்தர் நிச்சயமாகவே மன்னிக்கிறார்.
சிலர் மன்னிக்கிறார்கள். ஆனால் மறப்பதில்லை. மன்னித்துவிட்டேன் என்று சொன்னாலும், உள்ளத்தின் ஆழத்தில் ஒரு கசப்பான வைராக்கியம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் கர்த்தரோ, மன்னிக்கும்போதே அதை மறக்கவும் செய்கிறார். இனி உங்களுடைய பாவங்களை எண்ணாதிருப்பேன் என்று உடன்படிக்கை செய்திருக்கிறார். கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் பாவங்களை உங்களைவிட்டு அகற்றுகிறார்; இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் அதை பஞ்சைப் போலாக்கி உங்களை மகிழ்விக்கிறார். தேவபிள்ளைகளே, அந்த மன்னிக்கும் சுபாவம் உங்களில் இருப்பதாக.
நினைவிற்கு:- “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” (எரே.31:34).