AppamAppam - Tamil

Dec 10 – விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள்!

“தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்” (மாற்கு 11:22).

தேவனிடத்திலும், அவருடைய வார்த்தையிலும், அவருடைய வாக்குத்தத்தங்களிலும் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டியது அவசியம். விசுவாசத்தினால் வருகிற வல்லமையை கர்த்தர் சீஷர்களுக்கு விளக்கிக் காண்பிக்க வேண்டுமென்று விரும்பினார்.

ஒரு முறை இயேசு ஒரு அத்தி மரத்தை பார்த்தபோது, அதில் கனிகள் இல்லாததால் அதனை சபித்து ‘ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன்’ என்றார் (மாற். 11:14). இயேசு சபித்த மாத்திரத்தில் அந்த மரத்தின் மரணம் அதன் வேர்களில் தொடங்கிவிட்டது. அடுத்த நாள் சீஷர்கள் வந்து பார்த்தபோது அந்த அத்திமரம் வேரோடு பட்டுபோய் இருக்கிறதை கண்டார்கள்.

ஒரு முறை ஒரு சுவிசேஷக் கூட்டத்தின்போது, அதை நடத்திக்கொண்டிருந்த ஊழியர் கண் தெரியாத ஒரு பிச்சைக்காரனை பெயர் சொல்லி அழைத்தார். ‘கர்த்தர் உன் கண்களைத் திறக்கிறார்’ என்றார். பிச்சைக்காரன் தடுமாறி மேடைக்கு ஓடிவந்து ‘ஐயா, நீங்கள் என் பெயரை சொல்லி அழைத்தீர்கள். இயேசு கண்களைத் திறக்கிறார் என்று சொன்னீர்கள். ஆனால் என் கண்களுக்கு பார்வை இல்லையே’ என்றான். அதற்கு அவர்: கர்த்தர் சொன்னால் அதை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். ஆகவே நீ இயேசுவை எப்போதும் நோக்கிப் பார்த்து ‘ஆண்டவரே, உம்முடைய தழும்புகளால் குணமானேன் என்று சொல்லிக் கொண்டேயிரு. அவருக்கு துதி செலுத்து’ என்றார்.

 அவர் சொன்னதை அவன் அப்படியே ஏற்றுக் கொண்டான். அவன் தட்டுத் தடுமாறி மேடையிலிருந்து இறங்கிப் போனான். ‘தழும்புகளினால் குணமானேன், ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தான். சொல்ல சொல்ல விசுவாசம் அவனுக்குள்ளே அதிகரித்தது. மறுநாள் அவனுடைய கண்கள் பூரணமாய் திறந்துவிட்டது. ‘என்னை சுகமாக்கிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்று கர்த்தருக்கு நன்றி செலுத்தினான்.

கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அறிக்கை செய்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு விசுவாசம் உங்களிலே பெருகும். பிள்ளையில்லாத ஆபிரகாமுக்கு கர்த்தர் எழுபத்தைந்து வயதிலே வாக்குத்தத்தம் பண்ணினார். சாராளின் மூலமாய் உனக்கு ஒரு பிள்ளை பிறப்பான் என்றார். ஆனால் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிள்ளை பெற்றெடுக்கும் எந்த சாத்தியக்கூறும் இல்லாதிருந்தது.

ஆனாலும் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருக்கு இது ஒரு சிறிய காரியம். அவர் சொன்னதை நிறைவேற்றுவார் என்று நம்பியிருந்தார்கள். அப்படியே கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணி இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஈசாக்கை பிறக்கும்படி செய்தார்.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வாக்கு ஒருநாளும் மாறாது. காலதாமதமானாலும், விசுவாசத்தோடு காத்திருங்கள். கர்த்தர் அதை நிச்சயமாகவே செய்வார்.

நினைவிற்கு:- “…எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” (மாற்கு 11:24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.