No products in the cart.
Dec 7 – விசுவாசிக்கிறவன்!
“…விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா. 28:16).
கர்த்தர் மேல் வைக்கும் விசுவாசம் அசையாத நங்கூரம் போன்றது. கடல் கொந்தளிக்கலாம், புயல் வீசலாம். ஆனால் நங்கூரம் உறுதியாய்ப் போடப்பட்டிருக்குமென்றால் கப்பல் எந்த சூழ்நிலையிலும் அசையாது.
ஒரு முறை ஒரு தகப்பன் தன் மகளுக்குப் பிரசவ வலி வந்துவிட்டது என்று சொல்லி அங்கும் இங்குமாய் ஓடினார். மகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதற்காக வாடகைக் காரைக் கூப்பிட்டார். ஒருவனும் வரவில்லை. எதிரிலே வந்தவர்கள், குறுக்கே வந்தவர்கள் என்று எல்லார் மேலும் அவருக்குக் கோபமும் எரிச்சலும் உண்டாயின. காரணம் பதட்டம்!
டாக்டர்களைப் பாருங்கள்! கைகளிலே பதட்டம் இருக்குமென்றால் அவர்களால் முக்கியமான அறுவை சிகிச்சைகளைச் செய்ய முடியாது. வாகனம் ஓட்டுகிறவர்களுக்குப் பதட்டம் இருந்தால் அது விபத்திலேதான் முடியும். இப்படிப்பட்ட பதட்டங்களிலிருந்து தப்ப என்னதான் வழி?
‘விசுவாசிக்கிறவன் பதறான்’ என்பதே வேதம் சொல்லும் வழி. கர்த்தர் மேல் விசுவாசத்தை வைக்கும்போது அவர் எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறதினால் நீங்கள் பதட்டப்பட வேண்டிய அவசியமேயில்லை. ‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்’ என்று விசுவாசமுள்ளவர்களாய் கர்த்தரையே சார்ந்திருக்கும்போது, நீங்கள் பூரண சமாதானத்துடன் வாழுவீர்கள்.
வேதம் சொல்லுகிறது, “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” (சங். 55:22). “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்” (1 பேதுரு 5:7). கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் “துர்ச்சேதியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்” (சங். 112:7).
ஒரு முறை ஒரு பிரசங்கியார் சுவிசேஷக் கூட்டத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய மகன் மரித்துப்போன செய்தி அவருக்கு வந்தது. ஆனால் அவர் எந்தவித பதட்டமுமடையாமல் தொடர்ந்து கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கித்து முடித்தார்.
தன்னைச் சூழ இருந்தவர்களைப் பார்த்து, “என் கண்கள் கண்ணீரினால் நிறைந்திருக்கின்றன. நான் அன்போடு வளர்த்த என் மகன் மரித்துவிட்டான். ஆனால் என் உள்ளமோ கர்த்தரில் சார்ந்திருக்கிறது. ஏனென்றால் என் மகன் மேன்மையான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறான் என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார் அவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்றார்.
நீங்கள் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் இருந்தால், எந்தச் சூழ்நிலைக்கும் பயப்படாமல் இருப்பீர்கள். எங்கே விசுவாசம் உண்டோ அங்கே தைரியமுண்டு. எங்கே விசுவாசம் உண்டோ அங்கே தெய்வீக பிரசன்னமுண்டு! தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையிலே கடல் கொந்தளிக்கலாம், புயல்கள் வீசலாம், அலைகள் சீறிட்டு எழும்பலாம். ஆனால் கர்த்தர் உங்கள் படகில் இருக்கிறபடியினால் நீங்கள் பதற வேண்டிய அவசியமில்லை. விசுவாசிக்கிறவன் பதறான். நினைவிற்கு:- “மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத். 21:22).