AppamAppam - Tamil

செப்டம்பர் 21 – செவ்வையாக்குவேன்!

“நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்” (ஏசா. 45:2).

கர்த்தர் இரட்டிப்பான வாக்குத்தத்தத்தை இங்கு அருளிச் செய்கிறார். முதலாவது, நான் உனக்கு முன்னே செல்வேன் என்றும், இரண்டாவதாக, கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்றும் சொல்லுகிறார். உங்கள் வாழ்க்கையில் பல காரியங்கள் கோணலானவைகளாக இருக்கலாம். கோணலான உறவுகளும், கோணலான வழிகளும், கோணலான உள்ளங்களும் இருக்கலாம். அவைகள் செவ்வையாக்கப்பட வேண்டும். எப்படி அவைகள் கோணலாகின்றன? உங்களைப் பற்றி சிலர் மற்றவர்களுடைய உள்ளத்தில் அவதூறுகளைப் பரப்பும்போதும், வதந்திகளைச் சொல்லும்போதும், அவர்களுடைய நேரான உள்ளம் உங்கள் மீது எரிச்சலடைந்து கோணலாகிறது.

கோள் மூட்டுகிறவர்கள், பொறாமைக்காரர்கள் எப்போதும் கோணலான நோக்கத்தோடே பார்க்கிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில் மற்றவர்களுடைய உள்ளத்தில் விதைக்கப்பட்டிருக்கிற கசப்பு விதைகளை உங்களால் எடுக்க முடிவதில்லை. கோணலானவைகளை உங்களுடைய பிரயாசத்தினால் செம்மையாக்க முடிவதில்லை. ஆனால் இன்று கர்த்தர் உங்களைப் பார்த்து, ‘நானே உனக்காக முன்னே சென்று கோணலான எல்லாவற்றையும் செம்மையாக்குவேன்’ என்கிறார்.

நம் ஆண்டவர் தடைகளை நீக்கிப் போடுகிறவர். வேதம் சொல்லுகிறது, “தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாக போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா 2:13).

கர்த்தர் உங்களுக்கு முன்பாக நடந்து போகும்போது, கோணலானவைகளெல்லாம் செம்மையாகிவிடும். குடும்பங்களில் மாமியார், மருமகள் பிரச்சனைபோலப் பல பிரச்சனைகள் ஏற்படும். கசப்பானது வளர்ந்துகொண்டே போகும். ஆனாலும், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, “ஆண்டவரே, இப்பிரச்சனைகளை கண்ணோக்கி பாரும். என் நியாயங்கள் புரட்டப்படுகின்றன. நீரே சர்வலோக நியாயாதிபதி.எனக்காகப் பரிந்து பேசுகிறவர் நீர் மட்டுமே. எனக்காக முன்னேபோய் கோணலானவைகளை நேராக்கித் தாரும்” என்று ஜெபிக்கையில், கர்த்தர் நிச்சயமாக சமாதானத்தைக் கட்டளையிடுவார்.

யாக்கோபு அப்படிதானே ஜெபித்தார். ஏசாவை சந்திக்க வேண்டிய நாளுக்கு முன்னிரவு, யாக்கோபு கர்த்தருடைய பாதத்தைப் பற்றிக் கொண்டு, இரவெல்லாம் ஜெபித்தார். என்ன ஆச்சரியம்! அடுத்த நாள் தன்னுடைய அண்ணனைச் சந்திக்கப் போனபோது, அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

ஒரு நொடிப்பொழுதில் பழைய பகைமைகள் எல்லாம் மறைந்துபோயின. புதிய சமாதானம், புதிய சகோதரப் பாசம், புதிய நட்புறவு ஏற்பட்டது. ஆம், கர்த்தரே அதைச் செய்தார். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கும் அதைப்போலவே உதவி செய்வார்.

நினைவிற்கு:- “அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசாயா 42:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.