No products in the cart.
Oct – 31 – ஜெபமும் ஜீவனும்!
“…ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” (1 பேது. 4:7).
நீங்கள் “ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்” என ஊக்கமாய் பாடுகிறீர்கள். ஜெபத்தை உயிர்த்துடிப்புக்கும், சுவாசத்திற்கும் ஒப்பிட்டு ஜெபத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறீர்கள். ஜெப நேரத்தில் ஜீவனாகிய கிறிஸ்து உங்களை வல்லமையினால் நிரப்புகிறார். ஆவிக்குரிய ஜெபம் ஜீவனைத் தருகிறது.
ஜார்ஜ் முல்லர் என்ற பரிசுத்தவானுடைய வாழ்க்கையிலும் ஜெபமே அவரது உயிர்நாடியாக இருந்ததால், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அனாதை சிறுவர்களுடைய ஜீவனை அவர் காத்தார். அவர்களுக்கு நாள்தோறும் உணவு, உடை, உறைவிடம் அத்தனையையும் ஜார்ஜ் முல்லருடைய ஜெபமாகிய ஜீவனிலே இருந்தது. அவர் ஜெப டைரியை பழக்கப்படுத்தி, எந்தெந்த ஜெபங்களுக்கு கர்த்தர் பதில் கொடுத்திருக்கிறார், இன்னும் பதில் தர வேண்டிய ஜெபம் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கு வைத்துக்கொண்டு அவர் ஜெபித்துக் கொண்டேயிருந்தார். தன் ஜெபம் ஜீவனுள்ள ஜெபமாய் இருக்கிறதை அவர் விசுவாசத்தினாலே தெரிந்து, ஜெபத்திற்குப் பதிலைப் பெற்றுக்கொண்டே வந்தார்.
ஆதி அப்போஸ்தலர்கள் தனியாகவும், சபையாகவும் ஜெபித்தார்கள். ஒன்று கூடி ஒருமனதாயும் ஜெபித்தார்கள். அந்த ஜெபத்தில் ஜீவன் இருந்ததினாலே அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. வெற்றியுள்ள வாழ்க்கைக்கு விசுவாசம் எவ்வளவு அவசியமோ அதே அளவு விசுவாசம் ஜெப ஜீவியத்திற்கும் அவசியம். ஜெப ஜீவியமே கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அஸ்திபாரமாக அமைகிறது. அழகான கட்டிடம் பெலமுள்ள கட்டிடமாக நிலைத்து நிற்க வேண்டுமென்றால், ஆழமான அஸ்திபாரம் கட்டப்பட்டு, அது கன்மலையோடு இணைந்திருக்க வேண்டியது அவசியம். உங்களுடைய வாழ்க்கை வெற்றியுள்ள ஜெயமுள்ள வாழ்க்கையாக நிலைத்து நிற்க வேண்டுமென்றால், உங்கள் அஸ்திபாரமாகிய ஜெபம் கன்மலையாகிய கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டும்.
தானியேலின் ஜெபம் அவனுக்கு ஜீவனைப் பெற்றுத் தந்தது. சிங்கங்களால் அவனுடைய ஜீவனை பறிக்க முடியவில்லை. ஜெபம் அவனுடைய பாதுகாவலான கேடகமாக இருந்து பாதுகாத்தது. தானியேலுடைய பகையாளிகள் தானியேல் தினமும் மூன்று வேளை ஜெபிப்பதைக் கண்டார்கள். ஆனால் பாபிலோனிய ராஜாவோ தானியேலை இடைவிடாமல் ஜெபிப்பவனாகக் கண்டான். ஆகவேதான் ராஜா தானியேலைப் பார்த்து, “…நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன்… உன்னை தப்புவிக்க வல்லவராயிருந்தாரா?” என்று கேட்டான் (தானி. 6:20). ஆம், ஜெபத்தை ஜீவனாக தானியேல் கொண்டிருந்ததினாலே தானியேலின் ஜீவன் கர்த்தருடைய பார்வைக்கு மேன்மையுடையதாய் இருந்தது.
ஜெபமே ஜீவன் என்பதை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அறிந்து கொண்டார்கள். ஜெபத்திலே கர்த்தரைத் துதித்தார்கள், ஆராதித்தார்கள். வேதம் சொல்லுகிறது, “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினி சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” (தானி. 3:17) என்று அவர்கள் தைரியமாக முழங்கினார்கள்!
தேவபிள்ளைகளே, போராடி ஜெபிக்கிற ஊக்கமான ஜெபத்திற்கு கடந்து வாருங்கள். உங்கள் முழங்காலின் ஜெபம் உங்கள் பலவீனத்தை மாற்றும். ஊக்கமான ஜெபம் உங்களை பாதுகாக்கும்.
நினைவிற்கு:- “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங். 126:5).