AppamAppam - Tamil

Oct – 29 – சிட்சை!

“எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபி.12:11).

 சிட்சையை யாரும் விரும்புவதில்லை. ஆனால், ஒரு மனுஷன் சீர்ப்படுவதற்கு சிட்சை மிகவும் அவசியமாயிருக்கிறது. கர்த்தருடைய சிட்சை ஒருவேளை துக்கமாய் காணப்படக்கூடும். ஆனால், பிற்காலத்தில் அதுவே ஆசீர்வாதமாக மாறும் என்பதை நீங்கள் மறந்து போய்விடக்கூடாது. நீங்கள் உங்களுடைய பிள்ளைகளை சிட்சிப்பது பிள்ளைகளுடைய நன்மைக்காகத்தான். அந்த தண்டனையானது பிள்ளைகளின் உள்ளத்திலுள்ள மதியீனத்தை அகற்றுகிறது; பெற்றோருக்கு பயந்து நடக்கும்படி செய்கிறது; ஒழுக்கமுள்ள பிள்ளையாக சீர் திருத்துகிறது.

 சிறு பிள்ளைகளை நீங்கள் பிரம்பினால் சிட்சிக்கிறீர்கள். பெரியவர்களை எப்படி சிட்சிப்பது? அரசாங்கம் அதற்காக பல விதமான அபராதங்களையும், தண்டனைகளையும், சிறைக்கூடத்தையும் வைத்திருக்கிறது. அதே நேரத்தில் உள்ளத்தில் செய்கிற பாவங்களும், அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவி விட்டுச் செய்கிற இரகசியச் செயல்களும், ஏராளம் இருக்கின்றவே! அவைகளிலிருந்து ஒரு விசுவாசியை திருத்தும் வழி என்ன? வேதம் சொல்லுகிறது: “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்” (எபி. 12:6).

ஒரு கல்லூரி பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடைய நாட்களில் கல்லூரியில் வாரந்தோறும் பரீட்சைகள் நடக்கும். அதில் தோல்வியடைந்து விட்டால் மத்தியானம் ஒரு மணிக்கு அவருடைய அறைக்கு முன்பாக போய் நிற்க வேண்டும். அவர் ஒவ்வொருவராக கூப்பிட்டு மிகக் கடினமான வார்த்தைகளைப் பேசுவார். அவருடைய கடினவார்த்தைகளை ஒரு முறை கேட்கிறவர்கள் மீண்டும் ஒருபோதும் தோல்வியடைந்த நிலைமையில் அவரைச் சந்திக்க விரும்பமாட்டார்கள். எப்படியாவது படித்து நல்ல மதிப்பெண் வாங்கி விடுவார்கள்.

அடுத்த முறையும் தேர்வில் தவறிவிட்டால் இன்னும் அதிகமாக கடுமையான முகத்தோடுகூட பேசுவார். அப்படியும் அந்த மாணவன் திருந்தாமல் போனால் அதற்குப் பிறகு அவர் பேசமாட்டார், சிரிப்பார். அவர் சிரித்தால் அதனுடைய அர்த்தம் என்னவென்றால், ‘இவனை கண்டித்து பிரயோஜனமில்லை. அவனில் முன்னேற்றம் காணப்படவில்லை’ என்பதுதான். அரசாங்க தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்.

ஆனால் கர்த்தர் உங்களை கண்டிக்கும்போது, உங்கள்மேல் அவர் அன்பு வைத்திருக்கிறார் என்பதை மறந்து போய்விடக் கூடாது. அந்த அன்பினால் தான் அவர் சிட்சைகளையும், பாடுகளையும், கஷ்டங்களையும் தன் மகனாகிய உங்களுடைய வாழ்க்கையிலே அனுப்பி உங்களை நல்வழிபடுத்துகிறார் (எபி.12:6-9).

நீங்கள் அவர் மகன் என்பதால்தான் சிட்சையின் மூலம் கர்த்தர் உங்களை பழக்குவிக்கிறார். பரிசுத்த பாதையில் நடக்க சொல்லிக் கொடுக்கிறார். அதை நீங்கள் ஆரம்பத்திலேயே கற்றுக்கொள்ளுவீர்களென்றால், அது உங்களை நித்திய ராஜ்யத்தில் கொண்டுசேர்க்கும். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிருங்கள்.

நினைவிற்கு:- “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங்.34:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.