AppamAppam - Tamil

Oct – 28 – போராட்டம்!

“பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே” (எபி. 12:4).

 நீதி கேட்டு சிலர் போராடுகிறார்கள். அதிக வருமானம் கேட்டு சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். அரசாங்கத்துக்கு விரோதமாக ஜனங்களும், அதிகாரிகளுக்கு விரோதமாக கீழே பணியாற்றுகிறவர்களும் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். ஏழை வயிற்றுக்கும் வாய்க்குமிடையே போராடுகிறான். பணக்காரன் அந்தஸ்துக்கும் ஆடம்பரத்துக்கும் இடையே போராடுகிறான்.

ஆனால் தேவனுடைய பிள்ளையாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு போராட்டம் உண்டு. அது என்ன போராட்டம்? சாத்தானோடுகூட போராட்டம்; பாவத்துக்கு எதிரான போராட்டம்; உலகம் மாமிசத்துக்கெதிராக போராட்டம்; நீங்கள் பரலோக பாதையிலே செல்லுவதை சாத்தான் விரும்புவதில்லை. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாய் அவன் இடைவிடாமல் போராடுகிறான். வேதம் சொல்லுகிறது, “…மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபே.6:12).

மாத்திரமல்ல, நீங்கள் பாவத்தோடுகூட இடைவிடாமல் போராடி ஜெயம் பெற்றவர்களாய் காணப்படவேண்டும். அநேகர் உலகத்தோடும் பாவத்தோடும் துன்மார்க்கத்தோடும் ஒத்துப்போய்விடுகிறார்கள். அவர்கள் உலகத்தின் ஆசாபாசங்களோடு போராடி ஜெயம் பெறுகிறதில்லை. அப். பவுல் “பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே” என்று அங்கலாக்கிறார் (எபி. 12:4).

அவருடைய வாழ்க்கையும் போராட்டமான வாழ்க்கையாகத்தான் இருந்தது. அந்தப் போராட்டத்தைக் குறித்து அவர் “நல்ல போராட்டம்” என்று குறிப்பிடுகிறார். “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ.4:7). அதுவே அவருடைய சாட்சி! அந்தப் போராட்டம் நன்மையாகவே முடிந்தது. அவர் ஓட்டத்தை ஜெயமாகவே ஓடி முடித்தார். அந்த ஓட்டத்தின் முடிவிலே அவருக்கு ஒரு பெருமிதம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு இருந்தது. “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” என்று உற்சாகமாய் எழுதுகிறார்.

பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். அவர்கள் தங்கள் போராட்ட வாழ்க்கையிலும் எப்படி கர்த்தருக்காக வைராக்கியத்தோடு நின்று ஜெயங்கொண்டார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உலகிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கு பெறும்படி எப்போதும் பாவத்தை எதிர்த்து நின்று போராடுவீர்களாக.

பாவ சோதனைகளைக் கொண்டு வந்து சத்துரு உங்களை எதிர்த்து வரும்போது இயேசுவின் இரத்தத்தை அவன் மேல் தெளிப்பீர்களாக. ‘அப்பாலே போ சாத்தானே உலகமும், அதன் ஆசை இச்சைகளும் எனக்கு வேண்டாம்; நான் கர்த்தரையே பின்பற்றுவேன்’ என்று சொல்லுங்கள். நீங்கள் அக்கினியாய் ஜீவித்தால் பாவம் உங்களை மேற்கொள்ளாது.

நினைவிற்கு:- “அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” (யோவான் 16:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.