AppamAppam - Tamil

Oct-12 – அனுப்பப்பட்டு வந்தேன்!

“…பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்” (தானி. 10:11).

“நான் அனுப்பப்பட்டு வந்தேன்” என்ற வார்த்தையை சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருடைய கண்கள் நம்மை இடைவிடாமல் கண்டுகொண்டேயிருக்கின்றன. நீங்கள் துயரப்படும்போது கர்த்தர் தம்முடைய தேவதூதர்களை அனுப்பி உங்களை திடப்படுத்துகிறார். அப்படித்தான் கர்த்தரால் அனுப்பப்பட்ட காபிரியேல் தேவதூதன் வயதான சகரியாவினிடத்தில் வந்தான் (லூக். 1:19).

ஒருமுறை ஒரு கிராமத்தில் ஒரு சிறிய ஆலயத்தின் பிரதிஷ்டை நடந்தது. அந்த ஆலயத்தின் உட்பக்கத்திலே குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான மின்சார விளக்குகளை போட்டு அலங்கரித்திருந்தார்கள். பிரதிஷ்டையின் முடிவில் யாரோ எதிர்பாராதவிதமாக அந்த மின்சார விளக்கின் மேல் கையை வைத்தபோது, அவருக்கு ஷாக் அடித்தது. மட்டுமல்ல, அந்த மின்சார கம்பிகள் கூட்டத்தின் நடுவிலே விழுந்து இமைப்பொழுதில் எல்லாரையும் மின்சாரம் பற்றிப் பிடித்துக் கொண்டது. எல்லாரும் மரணத்தோடுகூட போராடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது திடீரென யாரோ மின்சாரத்தை அணைத்ததைப் போன்று இருந்தது. யார் இவ்வளவு தைரியமாய் அந்த ஆலயத்திற்குள் வந்து மின்சாரத்தை அணைத்தது என்பது இன்றுவரை யாருக்கும் புரியாத புதிராவே இருக்கிறது. தேவதூதனைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்பது என்னுடைய கருத்து.

பூலோகத்திலே நீங்கள் கர்த்தருடைய குடும்பத்தில் அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். பரலோக குடும்பத்தில் தேவதூதர்கள் உங்களுக்கு ஒத்தாசை செய்ய எப்போதும் ஆவலுள்ளவர்களாயிருக்கிறார்கள். பிரச்சனை நேரங்களில் தேவதூதர்கள் இமைப்பொழுதிலே ஓடி வந்து உங்களுக்கு உதவி செய்கிறார்கள். அப். பவுல், “இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு” (எபே. 3:14,15) என்று குறிப்பிடுகிறார்.

பூமியிலே ஒரு மனுஷன் இரட்சிக்கப்படும்போது, அவன் மகிழ்வதுடன் கர்த்தரும் அவருடைய தூதர்களும்கூட சந்தோஷப்படுகிறார்கள். கர்த்தருடைய குடும்பத்திற்குள் அவர்களை வரவேற்கிறார்கள். மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் தேவதூதர் மத்தியில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று இயேசு கூறினார் (லூக். 15:7,10).

கொர்நேலியு, ஒரு புறஜாதியானாய் இருந்தபோதிலும்கூட, கர்த்தரை ஏற்றுக்கொண்டு தேவபக்தியுள்ளவனாய் இருந்தான். அவன் ஆவிக்குரிய ஜீவியத்தில் இன்னுமாய் வளர கர்த்தர் சித்தங்கொண்டார். ஒருநாள் பகலில், தேவதூதன் கொர்நேலியுவுக்கு வெளிப்படையான தரிசனம் கொடுத்து, “உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி… நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்” (அப். 10:4-6).

தேவபிள்ளைகளே, உங்களுக்கு அருமையாய் வழிகாட்ட கர்த்தரால் அனுப்பப்பட்டவர்களாய் தேவதூதர்கள் இருக்கிறார்கள்.

நினைவிற்கு:- “நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்…வந்து சேர்ந்தீர்கள்” (எபி. 12:22-24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.