No products in the cart.
Oct 11- நேசிக்கிறார்கள்!
“உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” (உன்.1:4). “கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” (உன். 1:3).
கிறிஸ்துவை அறிந்து கொள்ளுகிற எந்த மனுஷனாலும் அவரை நேசிக்காமல் இருக்கவே முடியாது. கிறிஸ்துவின் அன்பு, கிறிஸ்துவின் மனதுருக்கம், கிறிஸ்துவின் காருண்யம் ஒவ்வொருவரையும் அவரை நேசிக்கும்படி செய்கிறது.
இந்தியாவின் தந்தையாகிய மகாத்மா காந்தி ஒருமுறை இவ்வாறு சொன்னார், “கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் மார்க்கபேதங்களின் நிமித்தமும், சடங்குகள் பாரம்பரியங்கள் நிமித்தமும், மாய்மாலங்கள், சண்டைகள் நிமித்தமும் கிறிஸ்தவர்களை வெறுக்கிறேன். ஆனால் கிறிஸ்துவையோ என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அவர் மேல் எனக்கு அளவற்ற மரியாதையும் நேசமுமுண்டு” என்றார். அவரைப் போலவே தேசத்தின் மேலானவர்கள் எல்லாரும் கர்த்தரை நேசிக்கிறார்கள். அவருடைய போதனைகளின் மேல் பிரியம் கொள்ளுகிறார்கள்.
கிறிஸ்து பூமியிலே வாழ்ந்தபோது, அவருடைய அன்பு உத்தமர்களாகிய எல்லோரையும் வேகமாக இழுத்தது. அவருக்காக பேதுரு தன்னுடைய வலையையும், படகையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார். யோவான் அவருடைய நேசத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய மார்பிலே இளைப்பாறினார். மத்தேயு ஆயத்துறையிலிருந்து தன்னுடைய வேலையையும் விட்டு விட்டு கர்த்தர் மேல் வைத்த நேசத்தினால் அவருக்குப் பின் சென்றார். அவருடைய அன்பினால் இழுக்கப்பட்ட மரியாள், அவருடைய பாதங்களில் பரிமளத் தைலம் பூசினாள் (லூக். 7:38). மகதலேனா மரியாள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை வேளையில் கிறிஸ்துவின் கல்லறைக்கு சென்று அங்கே காத்துக் கிடந்தாள் (யோவான் 20:1).
அப். பவுல் அவருக்காக எந்த பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மகிழ்ச்சியோடு முன் வந்தார் (அப். 21:13). ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கர்த்தருக்காக இரத்த சாட்சிகளாய் மரிக்க ஆயத்தமானார்கள். உங்களுக்காக ஜீவனைக் கொடுத்த உத்தமரான கிறிஸ்துவை நீங்கள் எவ்வளவு அதிகமாக நேசிக்க வேண்டும்! அவருடைய அன்புக்கு இணையில்லையே. உத்தமர்கள் அவரை நேசிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள் என்பது மாத்திரமல்ல. கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள் என்றும் வேதம் சொல்லுகிறது. தன் பரிசுத்தமான கற்பை பாதுகாத்து கொண்டவர்களே கன்னியர்கள். கன்னியர்கள் என்றால் கறை திரையற்றவர்கள், லீலி புஷ்பத்தைப் போல வெண்மையானவர்கள், கர்த்தரை முழு இருதயத்தோடு நேசிக்கிறவர்கள் என்றெல்லாம் அர்த்தமாகும். ஆம், நம்முடைய ஆண்டவர் கன்னியர்களால் நேசிக்கப்படுகிற நேசராவார்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய சபை என்பது, கன்னியர்களால் நிறைந்த ஒரு சிறு கூட்டமாயிருக்கிறது. அது பரிசுத்தவான்களால் நிரம்பியிருக்கிறது. மணவாளனாகிய கிறிஸ்து எக்காள சத்தத்தோடு வெளிப்படும்போது அந்த கன்னியர்கள் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக வெளிப்படுவார்கள். சபை என்பது இரட்சிக்கப்பட்டவர்களின் சிறு கூட்டம். அங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஊற்றப்படும்போது, நீங்கள் கர்த்தருடைய மணவாட்டியின் ஸ்தானத்திற்கு உயர்த்தப்படுவீர்கள்.
நினைவிற்கு: “நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக் கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” (வெளி.19:7).