AppamAppam - Tamil

Oct 8 – யாருக்குத் தெரியும்?

“நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்?” (எஸ்தர் 4:14).

யாருக்குத் தெரியும்? எஸ்தர் ராஜாத்தியானதிலே கர்த்தருக்கு ஒரு நோக்கமிருந்தது. கர்த்தர் அவள் மூலமாய் யூதருக்கு பாதுகாப்பும், ஆதரவும் கொண்டு வர சித்தமானார். எஸ்தர் ஏதோ தற்செயலாக ராணியாகி விடவில்லை. அவள் ஒரு நோக்கத்தோடுகூட கர்த்தரால் ராஜமேன்மையைப் பெற்றவள்.

யாருக்குத் தெரியும்? கர்த்தர் உங்களை இரட்சித்தது ஒரு நோக்கத்தோடுகூட என்பதை மறந்து போகாதேயுங்கள். உங்களை வேலை ஸ்தலத்திலே வைத்திருப்பது ஒரு நோக்கத்தோடு கூடதான். நீங்கள் தற்போது தங்கியிருக்கிற இடத்துக்கு கர்த்தர் கொண்டுவந்தது ஒரு நோக்கத்தோடுதான். ஒருநாள் அதை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளுவீர்கள்.

யாருக்குத் தெரியும்? அன்றைக்கு நினிவே மக்கள் கர்த்தரிடத்தில் ஊக்கமாய் ஜெபித்தார்கள். நினிவே தேசத்து ராஜா, “யாருக்குத் தெரியும்; நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார்” (யோனா 3:9) என்றான். ஆம், அவர்களுடைய ஜெபமானது முழு நினிவேயையும், அதிலுள்ள 1,20,000 பேரையும், எல்லா மிருக ஜீவன்களையும் பாதுகாத்துக் கொண்டது.

யாருக்குத் தெரியும்? அன்று ஒரு சிறுவன் கர்த்தருக்கென்று ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் கொடுத்தபோது, அதன் மூலம் ஐயாயிரம்பேர் போஷிக்கப்படுவார்கள் என்பதும் வேதத்தில் நீங்காத இடம் கிடைக்கும் என்பதும் அவனுக்குத் தெரியுமா? ஒரு அடிமைப்பெண் தன்னை சிறைபிடித்துக் கொண்டு போன எஜமானுக்கு கர்த்தரைக் குறித்தும், கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலிசாவைக் குறித்தும் சொன்னபோது, அவனுடைய குஷ்டரோகம் நீங்கும் என்றும், அவளுடைய சிறிய வார்த்தையினால் பெரிய மீட்பு உண்டாகும் என்றும் அவள் அறியவா செய்தாள்?

யாருக்குத் தெரியும்? முதன் முதல் அந்திரேயா பேதுருவை இயேசுவினிடத்தில் வழி நடத்தினபோது, இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக பேதுரு பெரிய அப்போஸ்தலனாக மாறுவார் என்றும், தன் பிரசங்கத்தின் மூலமாக மூவாயிரம், ஐயாயிரம் என்று ஆத்துமாக்களை பரலோக ராஜ்யத்திலே சேர்ப்பார் என்றும் அறிந்திருந்தாரா?

யாருக்குத் தெரியும்? அன்று மார்ட்டின் லூத்தர் ஒரு சிறு அறைக்குள் சென்று கதவை பூட்டி உபவாசித்து ஜெபித்தபோது, கர்த்தர் தன்னை அவ்வளவு மேன்மையாக உயர்த்துவார் என்றும், அவ்வளவு பெரிய சபைகளை ஸ்தாபிக்க வேண்டியது வரும் என்றும் அவர் அறிந்திருந்தாரா?

யாருக்குத் தெரியும்? பக்தன் மூடி தன் வாலிபத்தில், ஒரு சிறு கடையில் ஏழை தொழிலாளியாய் வேலை செய்தபோது, ஒரு ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியர் அவரிடத்தில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லி இரட்சிப்புக்குள் வழி நடத்தினார். அந்த வாலிபன், பிற்காலத்தில் உலகத்தை அசைக்கப் போகிற பெரிய தேவனுடைய ஊழியக்காரனாவான் என்று எண்ணி இருந்திருப்பாரா? ஒரு நாள் சகேயு மரத்தில் ஏறும்போது, தன்னுடைய வீட்டுக்கு கிறிஸ்து வருவார் என்றும், தன்னிலே மகிமையான மாறுதல் ஏற்படும் என்றும் எதிர்பார்த்திருந்தாரா?

நினைவிற்கு:- “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது” (சகரி. 4:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.