bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

ஜனவரி 02 – இழந்துபோன நாட்கள்

“கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்” (புல. 5:21).

மேலே குறிப்பிட்டுள்ள இந்த வசனம் எத்தனை ஏக்கமும், உருக்கமும் நிறைந்த ஒரு ஜெபமாயிருக்கிறது! உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தரை நோக்கி, “ஆண்டவரே, எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்” என்று நீங்கள் சொல்லும்போது, கர்த்தர் உங்கள்மேல் மனமிரங்கி உங்கள் வாழ்க்கையை நிச்சயமாகப் புதிதாக்குவார்.

இந்த உலகத்திலே எண்ணற்ற உள்ளங்கள், “ஆண்டவரே எங்களுடைய நாட்களை ஆசீர்வதிக்கமாட்டீரா?” என்று புலம்புகின்றன. அவர்கள் காலையிலிருந்து இரவுவரையிலும் பல வித பிரச்சனைகளோடு தவிக்கவேண்டியதிருக்கிறது; வியாதியோடு வாடவேண்டியதிருக்கிறது; அவர்கள் வேறு வழியில்லாமல் பற்களைக் கடித்துக்கொண்டு நாட்களையும், நேரத்தையும் கஷ்டத்தோடு கடந்துகொண்டிருக்கிறார்கள். ‘எங்களுக்கு ஒரு விடிவு காலமே இல்லையா’ எனக் கதறுகிறார்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரையே நோக்கிப்பார்த்து, கண்ணீரோடு இந்த ஜெபத்தை ஏறெடுப்பீர்களாக! இந்த ஜெபத்தை செய்தவர் கண்ணீரின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிற எரேமியா தீர்க்கதரிசிதான். கண்ணீரின் ஜெபத்தைக் கர்த்தர் கண்டிப்பாகக் கேட்டு பதிலளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இஸ்ரவேலின் இராஜாவாகிய சிதேக்கியாவை பாபிலோனியர் சிறைபிடித்துக்கொண்டு போனார்கள். சிதேக்கியா இராஜாவின் பிள்ளைகளெல்லாம் அவன் கண்முன்னே வெட்டப்பட்டு துடிதுடித்து இறந்தார்கள்.

அதைக்கண்ட சிதேக்கியா இராஜாவின் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கிவழிந்தது. அவன் தேம்பித்தேம்பி அழுதான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறதைக் கண்ட பாபிலோனியர், சிதேக்கியாவின் கண்களையே பிடுங்கிப்போட கட்டளையிட்டார்கள்.

அவன் கண்கள் பிடுங்கப்பட்டன. கண்கள் இருந்த இடத்திலிருந்து இரத்தம் பெருவெள்ளமாய் வெளியே வந்தது. அவர்கள் அவன் கைகளிலே விலங்கிட்டு, பாபிலோனிய சிறையிலே அடைத்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட எரேமியா தீர்க்கதரிசி, ‘ஐயோ, எங்களுடைய பாவங்களினிமித்தம் அல்லவா இந்த வேதனைகளையும், துயரங்களையும் அனுபவிக்க வேண்டியதிருக்கிறது’ என்று சொல்லிப் புலம்பினார்.

அவர் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்” (புல. 5:21) என்று ஜெபித்தார்.

வருடத்தின் ஆரம்பத்திலே வந்திருக்கிற நீங்கள், வேதத்திலுள்ள இந்த பரிசுத்தவான்களைப்போல கர்த்தரை நோக்கிப் பார்த்து, “ஆண்டவரே, எங்களுடைய நாட்களைப் புதிதாக்கும்” என்று மன்றாடுவீர்களா?

தேவபிள்ளைகளே, கோடைகாலத்திற்குப் பிறகு வசந்தகாலம் வருகிறதுபோல உங்களுடைய வறண்ட நாட்களைத் தொடர்ந்து புதிய வருடத்திலே கர்த்தரின் ஆறுதலின் நாட்கள் துவங்கியிருக்கின்றன என்பதை மறந்துபோகாதிருங்கள்.

நினைவிற்கு:- “தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தை கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” (சங். 90:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.