No products in the cart.
மே 12 – ஆறாம் நாள்!
“பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும், ஜாதி ஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:24).
சிருஷ்டிப்பின் கடைசி நாளாகிய ஆறாவது நாளில் தேவன் நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும், கடைசியாக மனுஷனையும் சிருஷ்டித்தார். மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும் சிருஷ்டிக்கும்போது, ஏராளமாக, திரள்திரளாக, ஜாதிஜாதியாக அவற்றைச் சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது.
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் மட்டும், “தங்கள், தங்கள் ஜாதியின்படியே” என்னும் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் பத்து முறைகள் வருகிறது. ஆனால் மனுஷனை அப்படி ஜாதிஜாதியாக அவர் சிருஷ்டிக்கவில்லை. ஒரே ஒரு மனிதனை மட்டுமே, அதுவும் தம்முடைய சாயலின்படியாகத்தான் சிருஷ்டித்தார்.
இன்றைக்கும்கூட தேவன் உங்களை கிறிஸ்துவுக்குள் தேவசாயலாக சிருஷ்டிக்கிறார். வேதம் சொல்லுகிறது, “தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்” (ரோமர் 8:29). அந்த சாயலை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு பரிசுத்தத்தோடுகூட கிறிஸ்துவினுடைய அடிச்சுவடுகளில் பூரணத்தை நோக்கிச் செல்லுவீர்களாக. அப். பவுல், “தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே” (கொலோ. 3:10) என்று குறிப்பிடுகிறார்.
மனிதனுடைய சிருஷ்டிப்பு மற்ற எல்லாச் சிருஷ்டிப்புகளைப் பார்க்கிலும் வித்தியாசமானது, மேன்மையானது. உங்களுக்காகவே கர்த்தர் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். அப். பவுல், “அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே” (எபே. 1:4) என்று சிருஷ்டிப்பின் தெரிந்துகொள்ளுதலைக் குறித்து பேசுகிறார்.
ஒரு குயவன் வெறும் களிமண்ணை கையில் எடுக்கும்போது, அதை தன் மனக் கண்களினால் ஒரு அழகிய பாத்திரமாகக் காண்கிறான். ஒரு தச்சன் வெறும் மரக்கட்டைகளை அழகிய மேஜையாகக் காண்கிறான். அப்படியே கர்த்தரும் உலகத் தோற்றத்திற்கு முன்பே உங்களையும் கண்டு, தன்னுடைய சாயலையும், ரூபத்தையும் உங்களுக்குத் தர சித்தமானார். மட்டுமல்ல, உங்களுக்கு நித்திய மீட்பைக் கொண்டு வரும்படி தம்முடைய குமாரனாகிய இயேசுவையும் உலகத்தோற்றத்திற்கு முன்னே முன் குறித்தார்.
வேதம் சொல்லுகிறது: “அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசி காலங்களில் வெளிப்பட்டார்” (1 பேதுரு 1:20). உலகத்தோற்றத்திற்கு முன்னே குமாரன் உங்களுக்கு முன் குறிக்கப்பட்டது மட்டுமல்ல, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகவும் இருந்தார். ஆ, தேவன் உங்கள்மேல் வைத்த அன்பின் கரிசனை எவ்வளவு பெரியது!
நினைவிற்கு:- “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” (மத். 25:34).