AppamAppam - Tamil

Dec 9 – விசுவாசத்தில்!

“…விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோமர் 4:21).

ஆபிரகாம் விசுவாசத்தில் வல்லவரானார். விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டார். விசுவாசிகளின் சந்ததிகளுக்கு முன்னோடியானார். அவரைக் குறித்து வேதம் சாட்சியிடும்போது அவர் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை என்று குறிப்பிடுகிறது (ரோமர் 4:19).

சரீரம் வயது முதிர்ந்ததால் அவர் பலவீனப்பட்டது உண்மைதான். நூறு வயதாகிவிட்டதால் சரீரம் புதுச் சந்ததியை உருவாக்க வலிமையிழந்து செத்துப் போயிருந்ததும் உண்மைதான். ஆபிரகாமுக்கு கர்த்தர் குழந்தையை வாக்குபண்ணி இருபத்தைந்து ஆண்டுகள் ஓடி மறைந்ததும் உண்மைதான். ஆனால் அவருடைய விசுவாசமோ ஒருபோதும் பலவீனமாயிருக்கவில்லை.

சாதாரணமானவர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவிசுவாசமடைந்து சோர்ந்து போய் விடுவார்கள். அவர்களுடைய விசுவாசமெல்லாம் தள்ளாடிப்போய்விடும். ஆபிரகாம் விசுவாசத்தில் வல்லவராய் இருந்ததின் இரகசியம் என்ன? வேதம் சொல்லுகிறது: “…தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோம. 4:21). தேவனை மகிமைப்படுத்த, மகிமைப்படுத்த அவரால் விசுவாசத்தில் பெருக முடிந்தது, விசுவாசத்தில் பெலன் கொள்ள முடிந்தது. மாத்திரமல்ல, வல்லமையுள்ளவராய் விளங்க முடிந்தது.

‘ஆண்டவரே, நான் உம் வாக்கை நம்பி உம்மை மகிமைப்படுத்துகிறேன். உம் வாக்கு உலகங்களை சிருஷ்டித்ததே. உம்மை மேன்மைப்படுத்துகிறேன். நீர் இல்லாமையிலிருந்து எல்லாவற்றையும் சிருஷ்டித்தீரே. என் சரீரம் செத்துப் போன நிலைமையிலும் எனக்கு சந்தானத்தை சிருஷ்டிக்க போகிறீரே உம்மை மகிமைப்படுத்துகிறேன். நீர் என்னை பெலப்படுத்தி விட்டீர் என்று விசுவாசித்து உம்மை மகிமைப்படுத்துகிறேன்’ என்றெல்லாம் ஆபிரகாம் கூறி தேவனை மகிமைப்படுத்தியிருக்க வேண்டும். அவர் தேவனை மகிமைப்படுத்தினபடியால்தான் அவிசுவாசத்தை விலக்கி, விசுவாசத்தில் வல்லவரானார். கர்த்தருடைய உள்ளத்தை மகிழ்ச்சியாக்கினார். மட்டுமல்ல, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கை பெற்றுக்கொண்டார்.

 தேவபிள்ளைகளே, உங்களுடைய பிரச்சனைகளையே நீங்கள் நோக்குவீர்களானால் அவிசுவாசம்தான் உங்களில் பெருகும். உங்கள் நோய்களைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பீர்களென்றால் வியாதிகள்தான் உங்களில் பெருகும். உங்கள் வேதனைகளையும், பாடுகளையும் பற்றி சிந்தித்துக்கொண்டேயிருப்பீர்களானால் சாத்தானைதான் மகிமைப்படுத்துகிறவர்களாய் இருப்பீர்கள். உங்கள் விசுவாசத்தின் பெலன் குன்றிவிடும். ஒருபோதும் சூழ்நிலைகளைப் பார்க்காதேயுங்கள். தேவனை மகிமைப்படுத்தி, ஸ்தோத்தரித்து விசவாசத்தில் வல்லவர்களாகி விடுங்கள்.

தேவபிள்ளைகளே, சூழ்நிலை எதுவாக இருந்தாலும் உங்கள் கண்கள் கிறிஸ்துவையே நோக்கட்டும். அவரை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவர்களாகி விடுங்கள். நீங்கள் கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்யவேண்டுமல்லவா?

நினைவிற்கு:- “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி. 4:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.