No products in the cart.
Dec 6 – விசுவாசம்!
“…விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1).
இயேசு கிறிஸ்துவே விசுவாசத்தைத் துவக்குகிறவர். எந்த ஒரு வேலையைத் துவக்க வேண்டுமென்றாலும் அந்த வேலைக்குரிய ஆள் பலமும், மூலப்பொருட்களும் இல்லாவிட்டால் அந்த வேலையை துவக்க முடியாது.
ஒரு கட்டிட வேலையைத் துவக்க வேண்டுமானால் முதலாவது வேலையாள் தேவை. மேலும், கல், செங்கல், சிமெண்ட், கம்பி, மணல் போன்ற பொருட்களும் நிச்சயமாகவே தேவை. அவைகள் இல்லாமல் வேலையை துவக்க இயலாது.
கர்த்தர் மனிதனுடைய வாழ்க்கையைத் துவக்க நினைத்தபோது, அவனுக்குள் எலும்பு, நரம்பு, மாமிசம், தோல் போன்றவைகளை வைத்தார். அழகையும், அறிவையும், அன்பையும் கொடுத்தார். ஆத்துமா, ஆவியை வைத்தார். மாத்திரமல்ல, விசுவாசத்தையும் துவக்கினார். அதைக் கொண்டு மனிதன் தேவனோடு உறவாடினான். நண்பனைப் போல பழகினான். இந்த விசுவாசமே ஆவிக்குரிய வாழ்க்கையில் மனிதனை வளரும்படி செய்தது.
இன்றைக்கும் உங்களுக்குள்ளே கர்த்தர் விசுவாசத்தைத் துவக்குகிறார். வல்லமையான தேவ செய்திகளைக் கேட்கும்போது, ‘பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமே அதற்கு இயேசு ஒருவர் அல்லவா வழி’ என்ற விசுவாசம் சுரக்கிறது. தம்மண்டை வருகிறவர்களை அவர் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை என்கிற விசுவாசம் வருகிறது. விசுவாசத்தினாலே இரட்சிப்பு, ஞானஸ்நானம், அபிஷேகம், பரிசுத்த ஜீவியம், வெற்றி வாழ்க்கை, சாத்தான் மேல் ஜெயம் ஆகிய எல்லாமே உங்களுக்குக் கிடைக்கின்றன.
உலக காரியங்களிலே நம்பிக்கை ஏற்படுவதற்காக கர்த்தர் உங்களுக்கு ஐம்புலன்களைக் கொடுத்திருக்கிறார். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றின் மூலமாக உலகக் காரியங்களில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. குழாயைத் திறந்தால் தண்ணீர் வரும் என்று நம்புகிறீர்கள். சுவிட்சை போட்டால் விளக்குகள் எரியும் என்று நம்புகிறீர்கள்.
ஆனால் உங்களுக்குள் இருக்கும் உன்னதமான விசுவாசமோ, இயேசு கிறிஸ்துவினால் வைக்கப்படுகிற விசுவாசம். பரலோகத்திற்குரியவைகளை அருளுகிற விசுவாசம். இது ஐம்புலன்களில் ஒன்றல்ல. இது ஆறாம் புலனாய் இருக்கிறது. ஆனால் ஆறாம் புலனாகிய விசுவாசம் பரலோக வீட்டோடு உங்களை தொடர்புகொள்ள வைக்கிறது.
தேவபிள்ளைகளே, விசுவாசத்தை உங்களிலே துவக்கச் செய்கிறவர் அதோடு நின்று விடுவதில்லை. விசுவாசத்தை உங்களில் வளரச் செய்கிறார். விசுவாசத்தில் உங்களை வல்லவர்களாக்குகிறார். விசுவாசத்தை வெற்றியோடு முடிக்கவும் உதவி செய்கிறார்.
நினைவிற்கு:- “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” (எபி. 11:6).