AppamAppam - Tamil

Nov 5 – பிரச்சனையான தவளைகள்!

“பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்” (யாத். 8:8).

 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை. பார்வோனுக்கோ தவளைகளினால் பிரச்சனை. எங்கும் தவளைகள், எதிலும் தவளைகள், காண்கிற இடமெல்லாம் குதித்துக்கொண்டும், ஏறிக் கொண்டுமிருந்தன. தவளைகள் அருவருப்பானவை. சுவற்றிலே தவளைகள், சாப்பாட்டிலே தவளைகள், தலைக்குமேல் தவளைகள் என்று பார்க்கும் இடமெல்லாம் தவளைகளாய் இருந்தால் யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்?

சேற்றுக்குள் வாழுகிற அந்த தவளைகள் சோற்றிற்குள் குதித்துவிட்டால் யாருக்குத்தான் சாப்பிட மனம் வரும்? அது தேவனால் பார்வோனுக்கு வந்த ஒரு தண்டனையாய் இருந்தது. வேதம் சொல்லுகிறது: “…அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்” (சங். 78:45). “அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறை வீடுகளிலும் அவைகள் வந்தது” (சங். 105:30).

பிரச்சனை நீங்க பார்வோன் மோசேயினிடமும், ஆரோனிடமும் ஓடி வந்து ஜெபிக்கச் சொன்னான். ஆனால் மோசேயோ உடனே ஜெபிக்கவில்லை. விண்ணப்பம் பண்ண வேண்டிய காலத்தைக் குறித்துத் தரும்படி பார்வோனிடத்தில் கேட்டார் (யாத். 8:9).

அதற்கு பார்வோன் ‘நாளைக்கு’ என்றான் (யாத். 8:10). பாருங்கள்! தவளைகளை உடனே போகச் செய்ய அவர்களுக்கு பிரியமில்லை. “இன்றைக்கே, இப்பொழுதே” என்று பார்வோன் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! “தவளைகள் போக வேண்டும். ஆனால் இன்றைக்கல்ல நாளைக்கு!” அப்படியானால் இன்று முழுவதும் தவளைகளோடு சேர்ந்து, வாழ்ந்து, குதித்து கும்மாளமிட பார்வோன் தீர்மானித்துவிட்டான் என்றுதான் அர்த்தம்.

 அநேகரைப் பார்த்து “இரட்சிக்கப்படுகிறீர்களா?” என்றால் “நாளைக்கு” என்கிறார்கள். என்ன காரணம்? “இன்றைக்கு பாவ சந்தோஷத்திலே வாழுவேன், உலக சிற்றின்பங்களை உற்சாகமாய் அனுபவிப்பேன்” என்கிறார்கள். வேதம் எச்சரிக்கிறது, “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2). பார்வோனால் முழு எகிப்துக்கும் தவளைப் பிரச்சனை வந்தது. ஆனாலும் உடனடியாக அதை விலக்க அவனுக்கு பிரியமில்லை.

 ஒருவேளை உங்கள் மூலமாக உங்கள் குடும்பத்திற்கு பிரச்சனை வந்திருக்கலாம். கர்த்தர் பல முறை உங்களை எச்சரித்தும் நீங்கள் கேட்காததினாலே தவளைகளைப் போன்ற வாதைகளை அனுப்பியிருந்திருக்கக்கூடும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை இப்பொழுதே தேவனுடைய பாதத்தில் வைத்துவிட்டு நல்மனம் பொருந்துங்கள். “நாளைக்கு, நாளைக்கு” என்று சொல்லி பிரச்சனைகளை வளர்க்க வேண்டாம். நாளை என்பது நம்முடைய நாளல்ல. “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” (யாக். 4:13,14) என்று யாக்கோபு சொல்லியிருக்கிறார் அல்லவா?

நினைவிற்கு:- “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே” (லூக். 19:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.