No products in the cart.
Oct – 22 – பெலவீனம்!
“விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்” (ரோமர் 14:1).
அப். பவுல் ஒரு கூட்டம் விசுவாசிகளை சுட்டிக்காண்பித்து, அவர்கள் விசுவாசத்தில் பெலவீனமுள்ளவர்களாக இருந்தபோதிலும் சபையாரான மற்றவர்கள் அவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஆலோசனை கூறுகிறார். ஏன் விசுவாசத்தில் அவர்களுக்கு பெலவீனம் வந்தது? கர்த்தர் மேல் உள்ள அன்பும், ஜெப ஜீவியமும் குறையும்போது, அவிசுவாசம் தாக்குகிறது. சோதனைகளும், பாடுகளும் விசுவாசத்தை தடுமாறப் பண்ணுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலருடைய விமானம் ஒன்றை சில தீவிரவாதிகள் கடத்தி உகாண்டா தேசத்திற்கு கொண்டு போய் இறக்கினார்கள். அதிலுள்ள யூதர்களை மட்டும் கைது செய்து, மற்றவர்களை விடுதலையாக்கி விட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன், ‘நான் யூதன் அல்ல, நான் ஜெர்மனியைச் சேர்ந்தவன் என் பாஸ்போர்ட்டைப் பாருங்கள்’ என்று சொன்னான். ஆனால் கைது செய்தவர்களோ, ‘உன்னைப் பார்த்தாலே நீ யூதன் போலத் தான் இருக்கிறாய். எங்களை ஏமாற்றாதே’ என்று சொல்லி அவனுடைய பாஸ்போர்ட்டை வாங்கி கிழித்து எறிந்தார்கள்.
அப்போது அந்த மனிதன் தன் தவறுக்காக வருந்தினான். ‘நான் ஏன் பொய் சொன்னேன்? யூதன் இல்லை என்று சொல்லி ஏன் மறுதலித்தேன்? நான் யெகோவா தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமல்லவா? ஐயோ, நான் என் குடும்பத்தையும் தேவனையும் மறுதலித்து விட்டேனே’ என்று சொல்லி தன்னுடைய விசுவாச பெலவீனத்திற்காக மனம் கசந்து அழுதான்.
பேதுருவைப் பாருங்கள்! அவனும் விசுவாசத்தில் ஒரு பெலவீனன்தான். ஒரு வேலைக்காரியிடம் போய் கிறிஸ்துவைக் குறித்து மறுதலிக்க வேண்டிய நிலைமை வந்தது. “நீயும் இயேசுவோடு இருந்தவன் அல்லவா?” என்ற கேள்வி அவனுக்கு பயத்தையும் திகிலையும் கொண்டு வந்து விசுவாசத்தை அப்புறப்படுத்தி அவனை பெலவீனனாக்கி விட்டது. இப்படித்தான் நீங்கள் பாவத்தில் விழும் போது குற்ற மனச்சாட்சி உங்களை வாதிக்கிறது. விசுவாசத்தில் பெலவீனராய் மாறிவிடுகிறீர்கள். இயேசு பிரயாணம் செய்த படகிலே ஒரு முறை புயலும் கொந்தளிப்பும் அலைமோதியது. கடல் கொந்தளிப்பும் புயலும் சீஷர்களின் விசுவாசத்தையெல்லாம் போக்கடித்து அவர்களை பெலவீனர்களாக்கி விட்டது. இயேசு “அற்ப விசுவாசிகளே, ஏன் பயப்பட்டீர்கள்?” என்று சொல்லி, கடலையும் காற்றையும் அதட்டி அமைதல் உண்டாக்கினார் (மத் 8:26).
தேவபிள்ளைகளே, இயேசு உங்களுடைய பெலவீனங்களை ஏற்றுக்கொள்ளுகிறவர். உங்களுடைய விசுவாச பெலவீனத்தையும், ஜெபக்குறைவினால் உள்ளான மனுஷனில் வந்த பெலவீனத்தையும், ஆவிக்குரிய ஜீவியத்தில் வந்த தடுமாற்றத்தையும் அவர் அறிகிறார். அந்த அன்புள்ள தேவன் இப்பொழுதே கடலையும் காற்றையும் உங்களுக்காக அதட்டி ஆறுதலையும் சமாதானத்தையும் பெறச் செய்கிறார். உங்களை பெலவீனத்திலிருந்து கிறிஸ்து விடுதலை செய்திருக்க, பெலவீனர்களாகிய மற்றவர்களை தாங்க வேண்டியது உங்களுடைய கடமையல்லவா?
நினைவிற்கு:- “நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர் பொருந்தும்படிக்கும் விண்ணப்பம் பண்ணுகிறோம்” (2 கொரி. 13:9).