No products in the cart.
Oct – 20 – குற்றமற்ற மனச்சாட்சி!
“…நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்” (அப். 24:16).
குற்றமற்ற மனச்சாட்சி உங்களுக்கிருந்தால்தான் கர்த்தருடைய முகத்தை நேரடியாக நோக்கிப் பார்த்து “அப்பா, பிதாவே” என்று அழைக்க முடியும். குற்றமற்ற மனச்சாட்சி இருந்தால்தான் தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்து, அவருடைய சமுகத்தில் களிகூர்ந்து மகிழ முடியும்.
1. ஜெப நேரத்தில்:- குற்ற மனச்சாட்சி உங்களுக்குள் வாதிக்குமென்றால் வல்லமையோடும், எழுப்புதலோடும் உங்களால் ஜெபிக்க முடியாது. சாத்தானை முழு பெலத்தோடு, எதிர்த்து நிற்கவும் முடியாது. ஒருவர் மிக முக்கியமான காரியமாக ஊக்கமாக ஜெபிக்கும்போது, அவருடைய கண்களிலிருந்து இச்சைகள் ஒரு பெரிய தடுப்பு சுவராக நின்று அவருடைய ஜெபத்தை தடுத்ததாம். அப்பொழுது அவர் கதறி அழுது, அத்தகைய இச்சைகள் தன்னைவிட்டு அகலவேண்டுமென்று தேவ சமுகத்தில் அழுது மன்றாடினார். அவர் முழு இருதயத்தோடு கர்த்தரிடத்தில் கெஞ்சினபடியினால் கர்த்தர் தேவ பிரசன்னத்தால் அவரை நிரப்பினார். அதன் பிறகு அவர் ஜெபித்த காரியம் அப்படியே நிறைவேறினது.
2. பரிசுத்த ஆவிக்காக:- ஒருவர் பரிசுத்த ஆவிக்காக ஊக்கமாக ஜெபித்துக் கொண்டேயிருந்தார். பல நாட்கள் ஜெபித்தும் கிடைக்கவில்லை. ஆனால், அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு குற்ற உணர்வு அவரை வாதித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி ஒப்புக்கொடுத்தபோது கர்த்தர் ஒரு கடப்பாறையை ஞாபகப்படுத்தினார். பக்கத்து வீட்டில் பல மாதங்களுக்கு முன்பாக கடன் வாங்கிய கடப்பாறை அது. அந்த வீட்டிலுள்ளவர்கள் அதை கேட்க மறந்ததினால் இவர் அதை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டார். இதை தேவ ஆவியானவர் அவருக்கு உணர்த்திக் கொடுத்தப்படியினால் உடனே பொருத்தனை செய்துவிட்டு எழும்பி போய் அதைத் திருப்பிக்கொடுத்துவிட்டு வந்து முழங்கால்படியிட்டார். கர்த்தர் உடனே அவரை அபிஷேகித்தார்.
3. தேவனை சந்திக்க:- ஒரு அருமையான ஆவிக்குரிய சகோதரி வியாதிப்படுக்கையில் இருந்தார்கள். கடைசி நிமிடம் ஆனது. உயிர் பிரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். சில ஊழியக்காரர்கள் வந்து ஜெபித்தும் தேவனுடைய பிரசன்னம் அந்த படுக்கையில் இறங்கவில்லை. திடீரென்று அந்த சகோதரி அறையில் இருந்த மகனை அழைத்தார்கள். ‘மகனே, இந்த ரூ. 200/- ஐ வீட்டுக்காரரிடத்தில் கொடுத்துவிட்டு வா. வீட்டு வாடகை பாக்கி வைத்திருந்தேன்’ என்று சொன்னார்கள். அந்த பணத்தை எடுத்துக் கொடுத்தவுடனே கர்த்தருடைய பிரசன்னம் அங்கே இறங்கினது. இவர்கள் அமைதியாய் சந்தோஷத்தோடு மகிமைக்குள் பிரவேசித்தார்கள்.
தேவபிள்ளைகளே, எந்தச் சூழ்நிலையானாலும் குற்றமனச்சாட்சிக்கு இடம் கொடுக்காதிருங்கள். மனுஷருக்கு முன்பாகவும், கர்த்தருக்கு முன்பாகவும் நேர்மையாயிருங்கள். மனச்சாட்சி தெளிவுள்ளதாயிருந்தால் உங்கள் வாழ்க்கை முழுவதும் தெளிவுள்ளதாயிருக்கும். ஆகவே ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். வேதனை உண்டாக்கும் வழி இருக்கிறதா, கர்த்தரை துக்கப்படுத்தியிருக்கிறீர்களா, மனச்சாட்சியை மழுக்கியிருக்கிறீர்களா என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
நினைவிற்கு:- “கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே” (1 தீமோ. 1:5).