AppamAppam - Tamil

Oct – 18 – பிறந்த நாள்!

“…இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக். 2:11).

யார் யாருடைய உள்ளத்தில் கிறிஸ்து பிறந்திருக்கிறாரோ அவர்கள் பாக்கியவான்கள். கிறிஸ்து உங்களுடைய உள்ளத்தில் பிறப்பது உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷமான நாளாகும். அநேகம்பேர் தங்களுடைய பிறந்தநாளை விமர்சனையாக கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஆலயத்திலும் இந்த வாரம் தங்களுடைய பிறந்தநாளைக் கொண்டாடுபவர்கள் என்று சொல்லி, நீளமான பெயர்ப் பட்டியலை வாசித்து அவர்களுக்காக ஜெபிக்கிறார்கள். பிறந்தநாளின் போது கடந்த ஆண்டெல்லாம் கர்த்தர் செய்த நன்மைகளையும் கிருபைகளையும் நினைவுகூர்ந்து அவரைத் துதித்துப் போற்றுவது உங்களுக்குக் கிடைக்கும் பெரிய பாக்கியமாகும்.

புகழ்பெற்ற மிஷனெரியான டேவிட் லிவிங்ஸ்டன் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாளின்போது, நீண்ட நேரம் முழங்காலில் நின்று தேவனோடுகூட தான் செய்த உடன்படிக்கையை புதுப்பித்துக்கொள்வதுண்டு. அப்படியே கர்த்தர் ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு தம்முடைய பெலத்தையும், வல்லமையையும் அளவில்லாமல் கொடுத்தார்.

சார்லஸ் கிங்ஸ்லி என்ற ஒரு பக்தன், அவருடைய ஒரு பிறந்த நாளிலே மிகுந்த சந்தோஷத்தோடு, “நான் பூமியிலே பிறந்ததைக் குறித்து மகிழ்கிறதைப் பார்க்கிலும் கர்த்தருடைய குடும்பத்தில் பிறந்து இரட்சிக்கப்பட்ட பாக்கியத்தை எண்ணியே அதிகமாய் மகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டார். சிலர் தங்கள் பிறந்த நாளைக் குறித்து மகிழுகிறார்கள். இன்னும் சிலரோ நான் ஏன் பிறந்தேன் என்று கலங்கி தன்னுடைய பிறந்த நாளை சபிக்கிறார்கள்.

எல்லா பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பார்க்கிலும் மகா வேதனையான பிறந்த நாள் கொண்டாட்டம் ஏரோது ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டமாயிருந்தது. ஆம், அன்றையதினம்தான் ஏரோதியாளின் குமாரத்தி நடனம்பண்ணி, யோவான்ஸ்நானகனின் தலையை வாங்கினாள். எத்தனை வேதனையானது இது! இன்றைக்கும் அநேகர் பிறந்த நாளின் போது அதிகமாய் குடித்து வெறித்து கர்த்தருடைய நாமத்தை இழிவுபடுத்துவது வேதனையாகத்தான் இருக்கிறது. உங்களுடைய பிறந்தநாள் வரும்போது அந்த நாளை கர்த்தரை துதிக்கவும், உங்களுடைய வாழ்க்கையை மீண்டும் கர்த்தருடைய சமுகத்தில் அர்ப்பணிக்கவும் உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு முறை ஒரு சிறுவனுக்கு பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் பரிசுகளுக்குள்ளே ஒரு பெரிய சாக்லெட்டும், ஒரு கைக்கடிகாரமும், ஒரு அழகிய வேதாகமும் காணப்பட்டன. மூன்றையும் அவன் சிநேகித்தான், விரும்பினான், எனினும் சில ஆண்டுகளுக்கு பிறகு அவன் சொன்னான்: சாக்லெட் ருசியாக இருந்தது. உடனடியாக தின்று தீர்த்துவிட்டேன். கைக்கடிகாரம் சில காலம் ஓடினது. பிறகு பழுதாகி, பிரயோஜனமில்லாமல் போய்விட்டது. ஆனால் என்னுடைய கைகளில் இருக்கிற வேதாகமமோ எனக்கு தேனிலும், தெளிதேனிலும், மதுரமுள்ளதாய் இருக்கிறது. மட்டுமல்ல, என்றென்றைக்கும் எனக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு கூறினான். தேவபிள்ளைகளே, உங்களது சிறந்த பிறந்தநாள் பரிசாக கிறிஸ்துவும், அவருடைய வேதாகமமும் விளங்கட்டும்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே” (1 பேதுரு 1:25).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.