No products in the cart.
ஏப்ரல் 29 – விண்ணப்பம் பண்ணுங்கள்!
“எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்” (எபே. 6:20).
அப்.பவுல் தன்னை மிகவும் தாழ்த்தி, ‘எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். ஜெபியுங்கள், என்னை தேவ சமுகத்திலே உயர்த்தி மன்றாடுங்கள்’ என்று சொல்லுகிறார். தைரியமாய் அவர் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியங்களை அறிவிக்கிறதற்கான வாக்கினை அவருக்குக் கொடுக்கும்படி அவருக்காக விண்ணப்பம் பண்ணுமாறு அவர் கோருகிறார்.
ஜெபம் என்பது உங்களுடைய சுவாசம். உங்களுடைய இருதயத் துடிப்பு. ஆகவே ஜெபம்பண்ணவேண்டியது உங்களுடைய கடமை. பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஜெயமுள்ளவர்களாய் வெற்றிநடை போடவும் ஜெபம் அவசியம். ஜெபம் உங்களுக்கு ஒரு சிலாக்கியமாகவும், பாக்கியமாகவும்கூட இருக்கிறது. ஜெப நேரத்தில் ஆத்தும நேசரின் இனிய முகத்தைக் கண்டு பரவசமடையுங்கள். பிள்ளைகள் தகப்பனோடு உறவாடி களிகூருவதுபோல களிகூருங்கள். ஜெபத் தருணங்களை அலட்சியப்படுத்தாதிருங்கள்.
அனைத்து விசுவாசிகளும், ஊழியர்களும் செய்ய வேண்டிய இரண்டு முக்கிய கடமைகள் உண்டு. முதல் கடமை அவர்கள் ஜெபிக்கவேண்டும். இரண்டாவதாக, அவர்களுக்காக உண்மையாயும், உத்தரவாதத்தோடும் ஜெபிக்கக்கூடிய ஜெப வீரர்களை எழுப்பவேண்டும். யார் யாருக்கு ஜெபிக்கக்கூடிய தேவ மனிதர்கள் உடன்இருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாகவே பாக்கியவான்கள். வேதம் சொல்லுகிறது, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கி விடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே” (பிர. 4:9,10).
அப்போஸ்தலனாகிய பவுல் தனக்காக ஜெபிக்க ஆட்கள் தேவை என்பதை உணர்ந்தார். தன்னைத் தாழ்த்தி ‘எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்’ என்று எபேசுவிலுள்ள விசுவாசிகளிடம் அன்பாய்க் கேட்டுக்கொண்டார். நீங்களும்கூட ஜெபவீரர்களைக் காணும்போதும், ஊழியர்களைக் காணும்போதும் எங்களுக்காக ஜெபியுங்கள் என்று கேளுங்கள். நீங்களும் ஜெபியுங்கள்.
அநேக விசுவாசிகள் செய்கிற தவறு என்னவென்றால், காணிக்கைகளை ஊழியர்களிடம் தந்து தங்களுக்காக ஜெபிக்கக் கோருகிறார்களே தவிர அவர்கள் ஜெபிப்பதில்லை. தங்களுடைய சொந்த முழங்கால்களை முடக்கி, தங்களுக்காகவும் தங்களுடைய குடும்பங்களுக்காகவும் போதுமான அளவு ஜெபிப்பதில்லை. பிறருடைய ஜெபத்தையே சார்ந்திருக்கிறார்கள்.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஒருவருக்கொருவர் ஜெபிக்க வேண்டும், மன்றாடவேண்டும். ஒருவர் தொய்ந்துபோகும்போது, இடறிப்போகும்போது, பின்வாங்கிப்போகும்போது, மற்றவர்கள் ஜெபத்திலே தரித்திருந்து அவர்களை எப்படியாவது தூக்கி எடுத்து நிலைநிறுத்தவேண்டும். அதுதான் கிறிஸ்துவின் பிரமாணம். தேவபிள்ளைகளே, நீங்கள் ஜெபிக்கிறவர்களாகவும், மற்றவர்களுடைய ஜெப வாஞ்சையைத் தூண்டுகிறவர்களாகவும் இருங்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 15:32).