No products in the cart.
மே 29 – தேவ பிரசன்னமும், ஒருமனப்பாடும்!
“நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும், கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்” (1 யோவா. 1:3).
கர்த்தர் தன்னை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தும்போதெல்லாம் ஒரு கூட்ட ஜனங்களைத் தெரிந்துகொண்டார். பழைய ஏற்பாட்டில் யாக்கோபின் பிள்ளைகளாகிய பன்னிரண்டுபேரையும் தெரிந்துகொண்டு கோத்திரங்களாக்கினார்.
புதிய ஏற்பாட்டில் பன்னிரண்டுபேரை சீஷர்களாக தெரிந்துகொண்டு அவர்களை அப்போஸ்தலர்களாக்கினார். அன்று இஸ்ரவேலரின் மூலமாகக் கர்த்தர் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தி கானான் தேசத்தை சுதந்தரிக்கும்படிச் செய்தார்.
அப்போஸ்தலர்களை தெரிந்துகொண்டு, அவர்கள் மூலமாய் சுவிசேஷத்தை அறிவிக்கவும், ஜனங்களை இரட்சிப்புக்குள் கொண்டுவரவும், வழிநடத்தினார். அப்படிப்பட்ட தேவனுடைய பிள்ளைகளோடு ஐக்கியம்கொள்ளுவது தேவ பிரசன்னத்தையும், தெய்வீக சந்தோஷத்தையும், சமாதானத்தையும் உங்களுக்குள் கொண்டுவரும்.
அநேக திருச்சபைகளில் சபையாரிடையே அன்பின் ஐக்கியம் இருப்பதில்லை. தனித்தனியே வந்துவிட்டு தனித்தனியே போய்விடுகிறார்கள். அன்பான விசாரிப்பு என்பதே அவர்களிடையே இருப்பதில்லை. ஒருமுறை நான் ஊழியத்திற்குச் சென்றபோது, அங்குள்ள ஒரு ஊரில், உயர்ந்த ஜாதிக்கு என்று ஒரு ஆலயமும், தாழ்ந்த ஜாதிக்கென்று இன்னொரு ஆலயமும் வைத்திருந்ததைக்கண்டு மிகவும் வேதனைப்பட்டேன்.
கிறிஸ்து ஒருபோதும் பிரிந்திருப்பதில்லை. அவருடைய சரீரமாகிய சபை பிரிந்திருக்க அவர் விரும்புவதும் இல்லை. வேதம் சொல்லுகிறது, “எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது” (1 யோவா. 1:3).
ஒரே இரத்தத்தால் கழுவப்பட்டு, ஒரே ஆவியினால் தாகம் தீர்க்கப்பட்டு, ஒரே பிதா நமக்கு இருக்கும்போது, நமக்குள் பிரிவினைகளோ, சண்டைகளோ, கருத்து வேறுபாடுகளோ இருக்கக்கூடாது.
சபை கூடிவரும்போதெல்லாம் தேவனுடைய இனிய பிரசன்னத்தை உணர்ந்து மகிழும்படி பிரிவினைகளை அப்புறப்படுத்துங்கள். கசப்புணர்வுகளை நீக்கிப்போடுங்கள். வேதம் சொல்லுகிறது, “இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங். 133:1).
முதலாவது, நீங்கள் கர்த்தரிடத்திலே உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகூரவேண்டும். அதே நேரத்தில் உங்களைப்போல பிறரையும் நேசித்து அன்புகூரவேண்டும்.
வேதம் சொல்லுகிறது, “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால் அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவா. 4:20).
தேவபிள்ளைகளே, உங்களுடைய வீட்டிலானாலும் சரி, சபையிலானாலும் சரி, அங்கே அன்பின் ஐக்கியம் இல்லாவிட்டால் தேவனுடைய பிரசன்னத்தை உணரவே முடியாது என்பதை அறிந்து நடந்துகொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத். 5:24).
