No products in the cart.
மார்ச் 24 – வெற்றியின் ஆயுதம்!
“தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியில் பட எறிந்தான். அந்தக் கல் அவன் நெற்றியிலே பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்” (1 சாமு. 17:49).
வெற்றியின் அடுத்தபடி, ஜெயத்தின் ஆயுதத்தை தெரிந்துகொள்வதாகும். தாவீது பெரிய பெரிய படை ஆயுதங்களைத் தெரிந்துகொள்ளாமல், தனக்குக் கொடுத்த தேவஞானத்தின்படியேயும், அனுபவத்தின்படியேயும், வெளிப்பாட்டின்படியேயும் ஐந்து கூழாங்கற்களையே ஆயுதமாகத் தெரிந்துகொண்டார். வேதத்திலே பல இடங்களிலே, கர்த்தரை, ‘கல்’ என்றும், ‘கன்மலை’ என்றும், ‘மூலைக்கல்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வீடு கட்டுகிறவர்கள் ஆகாது என்று தள்ளின மூலைக்கல் அவர்தான். அந்த கல் “பரீட்சிக்கப்பட்ட கல். சீயோனிலே வைக்கப்பட்ட கல். கைகளினால் பெயர்க்கப்படாத கல். அந்தக் கல் எவன்மேல் விழுமோ, அவன் நொறுங்கிப்போவான்” (ஏசா. 28:16; மத். 21:44).
அந்த கன்மலையாகிய தேவனையே தாவீது தன் எண்ணத்தில் வைத்து, அவரே வெற்றிசிறக்கிறவர் என்று விசுவாசித்து, ஐந்து கூழாங்கற்களை கையிலெடுத்தார். கூழாங்கற்களின் எண்ணிக்கை ஐந்தாயிருந்ததன் காரணம் என்ன தெரியுமா? ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தருடைய ஐந்து நாமங்களைக்குறித்து ஏசா. 9:6-ல் “அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனை கர்த்தர். வல்லமை உள்ள தேவன். நித்திய பிதா. சமாதான பிரபு” என்று குறிப்பிடுகிறார். இந்த ஐந்து நாமங்களையே தன்னுடைய வெற்றியின் ஆயுதமாக தாவீது தெரிந்துகொண்டார்.
அந்த ஐந்து கூழாங்கற்களை எடுத்ததற்கு, இன்னொரு இரகசியமும் உண்டு. கோலியாத்தோடு பிறந்தவர்களிலே இன்னும் நான்கு இராட்ஷசர்கள் இருந்தார்கள். அவர்களையும் சந்திக்க தாவீது ஆயத்தமாயிருந்தார். மட்டுமல்ல, எத்தனையோ ஆயுதங்களை வைத்திருந்த கோலியாத்துக்கு, பெலவீனமான உடற்பகுதி அவனுடைய நெற்றியே என்பதை தாவீது அறிந்துகொண்டார். தன்னுடைய ஆயுதமான கல்லை சுழற்றி, அதனை நோக்கி அடித்தபோது, அது அவனது நெற்றியிலே ஆழமாய்ப் பதிந்தது. அவன் தாவீதுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தான்.
எந்தப் போரையும் ஜெயிப்பதற்கு, ‘வல்லமையுள்ள தேவன்’ என்கிற ஒரு கல் போதுமானது. நம்முடைய தேவன் சர்வவல்லமையுள்ளவர். அவர் யுத்தத்தில் ஜெயங்கொள்ளுகிறவர். நீங்கள் கிறிஸ்துவை உங்களுடைய வெற்றியின் ஆயுதமாகத் தெரிந்துகொள்வீர்களென்றால், நிச்சயமாகவே ஜெயத்தின்மேல் ஜெயம் பெறுவீர்கள். கர்த்தர் யோசுவாவிடம், “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று சொல்லி வாக்குத்தத்தம் பண்ணினார் (யோசுவா 1:5). இன்றைக்கு நீங்கள் அந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
தாவீது கோலியத்துடனான யுத்தத்திற்காக ஒரு போராயுதத்தைத் தெரிந்து கொண்டதுபோல, உங்கள் ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்ளும்படி, நீங்களும் உங்களுக்கு ஒரு போராயுதத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். துதிப்பது ஒரு போராயுதம். ஸ்தோத்திரிப்பது மற்றொரு ஒரு போராயுதம். கண்ணீரின் ஜெபம் என்பது இன்னுமொரு ஒரு போராயுதம். இந்த ஆயுதங்களைத் தரித்தவர்களாய் ஆவிக்குரிய யுத்தத்தில் சாத்தானுடன் போரிட்டு, அவனை நசுக்க முற்படுங்கள்.
நினைவிற்கு:- “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (2 கொரி. 10:4).