No products in the cart.
ஜூன் 22 – .சஞ்சலத்தில் ஆறுதல்!
“நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்” (எரேமியா 31:13).
சஞ்சல நேரத்திலும் ஆறுதல் தருகிறவர் கர்த்தர் ஒருவரே. அவர் உங்களுடைய சஞ்சலங்களையெல்லாம் மாற்றி, உங்களைத் தேற்றி, சந்தோஷப்படுத்துகிறவர்.
யாக்கோபின் வாழ்க்கையைப் பாருங்கள்! அவரது வாழ்க்கையில்தான் எத்தனை சஞ்சலங்கள்! யாக்கோபு, தன் மகன் யோசேப்பை மிகவும் நேசித்தார். அவருக்கு பலவருண அங்கியைக் கொடுத்தார். அவர் மிகவும் நேசித்த யோசேப்பு அவரைவிட்டு பிரிக்கப்பட்டார்.
ஒரு நாள் அவருடைய சகோதரர்கள் அவர்மேல் பொறாமைகொண்டு அவரைக் கொல்லவேண்டும் என்று எண்ணி, அவரைக் குழியில் தூக்கிப்போட்டு, மீதியானியர்களிடத்தில் விற்றுப்போட்டார்கள். அவருடைய பலவருண அங்கியை உரிந்துகொண்டார்கள்.
ஒரு வெள்ளாட்டுக் கடாவை அடித்து, அவரது பலவருண அங்கியிலே அதின் இரத்தத்தைத் தோய்த்து, தன் தகப்பனிடத்தில் அனுப்பி, “இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ பாரும் என்று சொல்லச் சொன்னார்கள்” (ஆதி. 37:32). அப்போது யாக்கோபுடைய உள்ளம் எவ்வளவு சஞ்சலப்பட்டிருந்திருக்கும்! எவ்வளவு வேதனைப்பட்டிருந்திருக்கும்! ஐயோ, என் மகனை துஷ்டமிருகம் பீறிப்போட்டுவிட்டதே என்று அவர் எவ்வளவு துடித்திருந்திருப்பார்!
ஒரு நாள் யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். அப்போது பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான். அதற்கு யாக்கோபு நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம். என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது. அவைகள் பரதேசிகளாய் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை (ஆதி. 47:7-9) என்று வேதனையோடு சொன்னார்.
கர்த்தர் அவரது சஞ்சலத்தை எல்லாம் மாற்றி அவருக்கு ஆறுதல் செய்தார். எந்த மகன் துஷ்ட மிருகங்களினால் பீறுண்ணப்பட்டு மரித்து போயிருப்பார் என்று எண்ணப்பட்டாரோ, அந்த மகனை பார்வோனுடைய அரண்மனையிலே ராஜபிரதானியாகக் கண்டார். தன்னுடைய முதிர் வயதில் தன்னை ஆதரிக்கிற அன்புள்ளவனாகக் கண்டார். கர்த்தர் அவரது சஞ்சலத்தை மகிழ்ச்சியாய் மாறப்பண்ணினார்.
வேதம் சொல்லுகிறது, “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” (யோபு 14:1). ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் கர்த்தர்மேல் நம்பிக்கையில்லாமலிருந்தால் அவன் சஞ்சலம் நிறைந்தவனாகவே காணப்படுவான். தேவபிள்ளைகளே, ஆறுதலின் தேவனோ, உங்களோடுகூட இருக்கிறார். அவர் உங்களோடுகூட இருக்கிறபடியினால் சஞ்சலமும், தவிப்பும் ஓடிப்போம் (ஏசாயா 35:10). ஆகவே, நீங்கள் ஒன்றுக்கும் கலங்காமல் உங்கள் பாரங்களையெல்லாம் கர்த்தர்மீது வைத்துவிடுங்கள். அவரே உங்கள் கலக்கங்களை நீக்க வல்லவர்.
நினைவிற்கு :- “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு” (பிர. 11:10).