No products in the cart.
ஏப்ரல் 27 – ஆகானின் தகப்பன்!
“ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்” (நீதி. 21:13).
ஒரு போதகர் தன் சபையாரிடம் ஆகானின் தகப்பன் பெயர் என்ன தெரியுமா என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ‘ஆகான் என்பவன் சாபத்தீடான எரிகோ பட்டணத்திலிருந்து பொன்பாளத்தையும், பாபிலோனிய சால்வையையும் எடுத்து தன் கூடாரத்திலே ஒளித்துவைத்ததினால் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் ஆயி பட்டணத்தில் தோல்வியடைந்து புறமுதுகு காட்டி ஓடினார்கள்.
முடிவில் அந்த தோல்விக்கு காரணம் ஆகான் என்பது தெரிந்ததும் அவனும் அவனுடைய குடும்பத்தாரும் கொல்லப்பட்டார்கள். அவனுடைய தகப்பன் பெயர் கர்மீ என்று வேதம் சொல்லுகிறது’ என்று அந்த போதகர் விளக்கினார்.
கர்மீ என்ற தமிழ்ச்சொல்லுக்கு கஞ்சன், பிசினித்தனம்பண்ணுகிறவன், சுயநலக்காரன் என்றெல்லாம் அர்த்தமாகும். வேதத்தில் சொல்லப்பட்ட கர்மீயின் குமாரன்தான் சுயநலமாகப் பாபிலோனிய சால்வையையும், பொன்னையும் தன் கூடாரத்திற்குள் ஒளித்துவைத்துக்கொண்டவன்.
கர்மீகள் ஆகான்களைப் பிறப்பிக்கிறார்கள். ஆகான்கள் சுயநலக்காரர்களைப் பிறப்பிக்கிறார்கள். முடிவில் இவர்கள் தோல்வியைப் பிறப்பிக்கிறார்கள். இதனால் தேவஜனங்கள் கஷ்டப்பட்டு யுத்தத்தில் தோல்வியடைகிறார்கள்.
கர்த்தருடைய ஊழியம் தடைபடுவதற்கும், குறைவுபடுவதற்கும் காரணம் ஆவிக்குரிய உலகில் இருக்கும் கர்மீகள்தானே. கர்த்தருடைய ஊழியத்திற்குச் சேரவேண்டிய தசமபாகத்தை வஞ்சிக்கும் கர்மீகள், சுவிசேஷப்பணியை தடைசெய்யும் கர்மீகள். இவர்கள் கர்த்தருக்கு சேரவேண்டிய காணிக்கையையும், தசமபாகத்தையும் கொடுக்காமல் சேர்த்துவைத்து கடைசியில் வியாதியும் வறுமையும் தாக்கி வேறு விதத்தில் பணத்தை இழப்பார்கள். “வாணியனுக்கு கொடுக்காதவன் வைத்தியனுக்குக் கொடுப்பான்” என்பதும் “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” என்பதும் பழமொழிகள்.
ஜார்ஜ் முல்லருடைய வாழ்க்கையிலே பெரும் வெற்றியிருந்தது. அவர் பெரிய செல்வந்தராக இருந்ததில்லை. ஆயினும் கர்த்தருக்கு கொடுக்கும் பெரிய உள்ளம் அவருக்கு இருந்தது. இதன் காரணமாக அவர் கேட்கக் கேட்க கர்த்தர் அவருக்கு நிறைவாய் கொடுத்துக்கொண்டேயிருந்தார். பத்தாயிரம் அநாதைக்குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய அவர் சிறந்த ஒரு நன்கொடையாளர்.
பல கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு அவர் தியாகமான நன்கொடைகளைக் கொடுத்தார். இதனால் செல்வமானது ஆயிரம் ஆயிரம் மடங்காய் அவருக்குத் திரும்பவந்தது. கடைசிவரை கர்த்தர் எந்தக் குறைவுமில்லாமல் அவரை அற்புதமாய் வழிநடத்தினார்.
வேதம் சொல்லுகிறது, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக். 6:38).
தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்குக் கொடுப்பது பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைப்பதைப் போன்றதாகும். அது பத்திரமானது. திருடர்களால் அதைத் திருட முடியாது. பூச்சிகளினால் அதை அரிக்கவும் முடியாது.
நினைவிற்கு:- “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று ……” (அப். 20:35).
