Appam, Appam - Tamil

ஏப்ரல் 13 – அன்பு இராவிட்டால்!

“நான் தீர்க்கதரிசன வரத்தை, உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1 கொரி. 13:2).

தீர்க்கதரிசன வரம் என்பது ஒரு அருமையான வரம்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசு இன்றும் தன் தீர்க்கத்தரிசிகளின் மூலமாய் இனிமையான செய்திகளை நமக்குத் தருவது அருமையானதல்லவா? அவை எவ்வளவாய் நம்மை ஆறுதல்படுத்தி உற்சாகப்படுத்துகின்றன! தேவனுடைய அன்பின் செய்திகளை மனுக்குலத்திற்குக் கொண்டுவருகிற தீர்க்கதரிசன வரத்தையுடையவர்கள் அன்புடன் இருக்கவேண்டும் அல்லவா?

ஒரு நீரூற்றிலிருந்து வரும் தண்ணீர் அடிபம்ப்பின் வழியாக மேலே வரும்போது பல நேரங்களில், அதிலுள்ள துரு மற்றும் எண்ணெய்க் கசடு ஆகியவற்றுடன் சேர்ந்துவெளிவருகிறது. இது ஊற்றுத்தண்ணீரின் குறைபாடு அல்ல; அடிபம்ப்பிலுள்ள குறைபாடு. அன்பில்லாதவன் உரைக்கும் தீர்க்கதரிசனத்தின் மூலமாக அவனுடைய சொந்த கசப்புக்களும், கோபங்களும், வைராக்கியங்களும்கூட இப்படி துருக்களைப்போல வெளிவந்துவிடுகின்றன. அது தீர்க்கதரிசனத்தையே அர்த்தமில்லாததாகச் செய்துவிடுகிறது.

தங்கள்மேல் அன்பு பாராட்டுகிறவர்கள் உரிமையோடு கடிந்து உரைக்கும்போது ஜனங்கள் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிவார்கள். ஆனால் தங்கள்மேல் அன்பில்லாதவர்கள் குற்றம் கூறும்போது மனக்கடினமடைந்து ஏற்றுக்கொள்ளமறுப்பார்கள். ஆகவே அன்புதான் முக்கியம்.

அதுபோலவே ஒருவனுக்கு அறிவின் வரங்கள் இருக்கலாம். மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத வேத இரகசியங்களை தெரிந்துவைத்திருக்கலாம். பெரிய வேத பண்டிதர்களாக இரண்டாம் வருகையைக் குறித்தும், வரப்போகும் காரியங்களைக் குறித்தும் திட்டமும் தெளிவுமாய் படம் வரைந்து விளக்கலாம். ஆனால் அன்பில்லாவிட்டால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

தேவ சமுகத்தில் நிற்கும்போது நீங்கள் எப்படிப்பட்டவர்கள், எவ்வளவு படித்தவர்கள் என்பது முக்கியமல்ல. “நீங்கள் தெய்வீக அன்போடு செயல்பட்டீர்களா?” என்பதுதான் முக்கியம். எவ்வளவு வரங்கள் இருந்தாலும், தீர்க்கதரிசனம் இருந்தாலும், அந்நிய பாஷை இருந்தாலும், சுகம் அளித்தல் இருந்தாலும் அன்பு இல்லாவிட்டால் ஒன்றுமேயில்லை.

ஒரு தொலைபேசியையோ, கைபேசியையோ பாருங்கள்! அது பார்வைக்கு சாதாரணமானதாக இருக்கிறது. ஆனால் நீங்கள் வெளிதேசத்திலிருந்து அதன்மூலமாக உங்கள் குடும்பத்தாரோடு பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய அன்பின் குரலைக் கேட்கும்போது, எத்தனை ஆனந்த பரவசமடைகிறீர்கள்! அது அன்பின் செய்தியையும், உள்ளத்தின் வாஞ்சையையும் வெளிப்படுத்துகிற கருவியாய் இருந்தாலும், உபயோகிக்காதபோது மிகச்சாதாரண ஒரு பொருளாய் காட்சியளிக்கிறது.

இதைப்போலத்தான் கர்த்தர் தீர்க்கதரிசியின் மூலமாக தொலைபேசியில் பேசுவதைப்போல பேசுகிறார். தீர்க்கதரிசியினிடத்தில் அன்பு இல்லாமல் போகுமென்றால் அந்தச் செய்தியும் நின்றுவிடுகிறது. தீர்க்கதரிசியானவர் தேவனுடைய ரகசியங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி அறிவிப்பது உண்மைதான். ஆனால் அவருடைய உள்ளத்தில் தேவ அன்பு இல்லாவிட்டால் அவர் பெற்ற வரங்களால் அவருக்கு ஒரு பிரயோஜனமில்லை.

நினைவிற்கு:- “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்?” (1 யோவா. 4:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.