No products in the cart.
நவம்பர் 25 – ஆத்துமா ஒரு யுத்தக்களம்
“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோம. 6:23). “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசே. 18:20).
ஒரு மனிதனுடைய சரீரம் அழிந்துபோனாலும் அழியாத நித்தியமான ஒன்று அவனது ஆத்துமாதான். ஆத்துமா விலையேறப்பெற்றது. ஒருவன் முழு உலகத்தையும் ஆதாயப்படுத்தினாலும் அவன் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
உங்களுடைய ஆத்துமாவை கர்த்தர் நேசிக்கிறார். ஆத்துமாவிலே தங்கவேண்டுமென்று விரும்புகிறார். இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறதே (வெளி. 21:3). உங்களுடைய ஆத்துமாதான் தேவனுடைய ஆலயம் (1 கொரி. 3:16). உங்களுடைய ஆத்துமாதான் அவருக்கு ஜெபவீடு. மகா பரிசுத்த ஸ்தலம். மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார் (1 பேது. 4:14). மட்டுமல்ல, கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் வாசம்செய்கிறார் (கொலோ. 1:27).
ஆனால் சாத்தானோ, அந்த ஆத்துமாவைத் தன் பக்கமாய் இழுத்துக்கொள்ள யுத்தம் செய்கிறான். தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்யவைத்துவிட்டால் சாத்தான் உங்களில் வந்து வாசம்பண்ணலாம் என்று எண்ணுகிறான். பலவிதமான பாவ இச்சைகளையும், உலகச் சிற்றின்பங்களையும் காட்டுகிறான்.
பாவம் வந்துவிட்டால் உங்களுக்கும் தேவனுக்கும் இடையே உள்ள தொடர்பு முறிந்துபோகும். பாவம் ஒரு தடுப்புச் சுவராய் மாறி தேவனுடைய முகம் மறைக்கப்படும் (ஏசா. 59:2).
ஆத்துமாவிலே நடக்கிற யுத்தமானது பாவத்திற்கும் பரிசுத்தத்திற்கும் இடையே நடக்கிற யுத்தமாகும். சாத்தான் ஆபாசக் காட்சிகள், சினிமாக்கள், நடனங்கள், சிற்றின்பங்கள், போதை மருந்துகள், இச்சைகள், குறிகேட்குதல் போன்றவற்றையெல்லாம் தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாகக் கொண்டுவருகிறான். கர்த்தரோ பாவத்தையும் சாத்தானையும் ஜெயிப்பதற்கு தம்முடைய இரத்தத்தை ஊற்றிக்கொடுத்திருக்கிறார். வேத வசனங்களைக் கொடுத்திருக்கிறார். ஜெபத்தின் ஆவியைக் கொடுத்திருக்கிறார்.
எந்த ஒரு மனிதன் தான் ஒரு யுத்தக்களத்திலே நிற்கிறேன் என்ற எண்ணமில்லாமல், சிற்றின்ப உலக மயக்கத்திலே கும்மாளமிட்டு, அரட்டை அடித்து, வீணாய் நேரத்தைப்போக்கி, ஜெபக்குறைவோடு வாழ்கிறானோ, அவனுக்குள் சாத்தான் எளிதாய் புகுந்து அவனை அழிவுக்கு நேராய் வழிநடத்துகிறான். வேதம் சொல்லுகிறது, “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்” (யோவா. 10:10).
“அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” (யாக். 1:14,15). “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோம. 6:23). “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசே. 18:20).
நினைவிற்கு:- “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:9,7).