No products in the cart.
ஏப்ரல் 23 – காக்கும் கர்த்தர்!
“கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்” (ஏசா. 52:12).
எவ்வளவு அருமையான வாக்குத்தத்தத்தைக் கர்த்தர் நமக்கு இன்றைக்குத் தருகிறார்! அவர் நம்மைக் காக்கிற கர்த்தர். கழுகு தன் செட்டைகளை விரித்து குஞ்சுகளின்மேல் அசைவாடிக் காக்கிறதுபோல அவர் உங்களைக் காப்பார். கோழி தன் குஞ்சுகளை செட்டைகளுக்குள் மூடி சிறகுகளால் காப்பதுபோல அவர் உங்களைக் காப்பார்.
சிவந்த சமுத்திரத்தின் கரையிலே இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் எவ்வாறு காப்பாற்றினார் என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். முன்னால் சீறி வரும் அலைகள் உள்ள பெரிய சிவந்த சமுத்திரம்; பின்னால் கொடூரமாய் வேட்டை நாய்களைப்போல எகிப்தியரின் சேனைகள். தப்பிக்க வழியேதுமில்லாமல், எல்லாப்பக்கமும் இக்கட்டு நிறைந்த ஒரு சூழ்நிலை.
அப்பொழுதுதான் கர்த்தர் மோசேயைப் பார்த்து அவர் கையிலிருந்த கோலை சிவந்த சமுத்திரத்தை நோக்கி நீட்டும்படிச் சொன்னார். என்ன ஆச்சரியம்! அந்த சமுத்திரம் இரண்டாய்ப் பிளந்து வழிவிட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந்தரையிலே நடப்பதுபோல சந்தோஷமாக நடந்துசெல்ல ஆரம்பித்தார்கள்.
ஆனால், பின்னால் பார்த்தபோதோ எகிப்தியரின் இரதங்கள், குதிரைகள், சேனைகள், தங்களைத் துரத்திக்கொண்டு வருவதைக் கண்டார்கள். இப்பொழுது என்ன செய்வது? இருபுறமும் சமுத்திரம். தப்பியோட இடமில்லை.
ஆனால் அந்த சூழ்நிலையிலும் கர்த்தர் அவர்களைக் காக்க வல்லவராய் இருந்தார். இதுவரை இஸ்ரவேலருக்கு முன்பாகச் சென்ற தேவதூதன் இப்பொழுது அவர்களுக்கு பின்னாக நடந்தான். இதுவரை முன் சென்ற மேக ஸ்தம்பம் அவர்களுக்குப் பாதுகாவலாக பின்பக்கம் வந்தது. அது இஸ்ரவேல் ஜனங்களுக்கு இரவைப் பகலாக்கிற்று. ஆனால், பார்வோனின் சேனைக்கோ அந்தகாரத்தைக் கொடுத்தது.
இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் முன்னும் பின்னும் பாதுகாத்தார். தேவதூதனும், மேகஸ்தம்பங்களும் பாதுகாப்பாக வந்தனர். அந்த அருமை ஆண்டவர் இன்றைக்கும் மாறவில்லை. அவர் உங்கள் தகப்பன் அல்லவா! நீங்கள் அவருடைய பிள்ளையல்லவா! உங்களையும் அவ்வண்ணமாகக் காப்பார்.
எத்தனை தீய மனிதர்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பினாலும் கலங்காதேயுங்கள். எவ்வளவுபேர் உங்களுடைய குடும்பத்தை அழிக்கவேண்டுமென்று சதி செய்தாலும் சோர்ந்துபோகாதேயுங்கள். தகப்பன் தன் பிள்ளைகளைக் காப்பதுபோல் கர்த்தர் உங்களைக் காப்பார். தாய் தேற்றுவதுபோல் அவர் உங்களைத் தேற்றுவார்.
பிரச்சனைகளும் போராட்டங்களும் வரும்போதெல்லாம் 121ம் சங்கீதத்தை எடுத்து ஜெபத்தோடு வாசியுங்கள். அங்கே எத்தனை அருமையான வாக்குத்தத்தங்களை கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிறார்!
சங்கீதக்காரர் சொல்லுகிறார், “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்” (சங். 121:5-7). தேவபிள்ளைகளே, இவ்வாக்குத்தத்தங்களை விசுவாசத்தோடு சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங். 46:1).
