No products in the cart.
ஏப்ரல் 21 – வனாந்தரத்திலே வழிகள்!
“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; …. நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்” (ஏசா. 43:19).
எனக்கு ஒரு பாதை திறக்காதா, எனக்கு ஒரு வழி பிறக்காதா, எனக்கு ஒரு நன்மையான காரியம் நடக்காதா, என் குடும்பத்தை கர்த்தர் மேன்மைப்படுத்தி உயர்த்தமாட்டாரா போன்ற பல கேள்விகள் உங்களில் எழக்கூடும். ஆனால், ஆண்டவருடைய வாக்குத்தத்தம் என்ன? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளிகளில் ஆறுகளையும் உண்டாக்குவேன் என்பதே ஆகும்.
மனுஷன் பல பாதைகளை மூடலாம். வாசல்களை அடைக்கலாம். எரிகோ அலங்கத்தில் உள்ளதுபோல வெண்கலக்கதவுகளும், இரும்புத் தாழ்ப்பாள்களும் உங்களுக்கு சவால்விடலாம். அந்த நேரத்தில் கர்த்தரை நோக்கிப்பாருங்கள். எந்த இடத்திலே வழி திறக்காது என்று நீங்கள் எண்ணினீர்களோ அந்த இடத்திலேயே அவர் வழியைத் திறக்கச்செய்வார்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளிவந்தபோது சிவந்த சமுத்திரக்கரைவரையில் வந்து அதற்குமேல் போக வழியில்லாமல் திகைத்து நின்றுவிட்டார்கள். முன்னால் சமுத்திரம், பின்னாலோ, துரத்தி வருகிற எகிப்தின் ராணுவம். இரண்டு பக்கங்களிலும் பெரிய மலைகள். எகிப்தியரின் கையிலே விழுந்து மடிவதா அல்லது சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து இறப்பதா என்று தெரியாமல் அங்கலாய்த்தார்கள். கர்த்தர் மோசேயைப் பார்த்து, ‘உன் கோலை சிவந்த சமுத்திரத்துக்கு நேராக நீட்டு’ என்று சொன்னார். நீட்டியபோது சிவந்த சமுத்திரம் இரண்டாய்ப் பிரிந்து வழி உண்டானது.
அதுபோலவே யோர்தான் நதிக்கரையிலே வந்து யோர்தானின் வெள்ளத்தைப் பார்த்து இஸ்ரவேலர் பயந்தார்கள். அறுப்புக்காலம் முடியும்வரைக்கும் யோர்தானில் பெருவெள்ளங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும். எப்படி இந்த பெருவெள்ளத்தைக் கடப்பது, எப்படி வழி உண்டாகும் என்று பயந்தவர்களாய் உடன்படிக்கைப் பெட்டியை சுமந்த ஆசாரியர்கள் யோர்தான் நதியிலே கால் வைத்தபோது அது இரண்டாய்ப் பிரிந்து வழி உண்டானது.
கர்த்தர் உனக்காக வழியைத் திறக்க நினைக்கும்போது யாராலும் அதைத் தடுக்கவேமுடியாது. அவர் வெண்கலக் கதவுகளை உடைத்து இரும்புத் தாழ்ப்பாழ்களை முறிக்கிறவர். அவரே தடைகளை நீக்கிப்போடுகிறவர். நமக்கு முன்செல்லுகிறவர் (மீகா 2:13). ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவர்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை அக்கினிச்சூளையிலே தூக்கிப்போட்டார்கள். அங்கேயும் கர்த்தர் வழி உண்டாக்குவாரோ? ஆம், அந்த சூளையில் பற்றிப்பிரகாசித்துக்கொண்டிருந்த அக்கினியின்மத்தியிலும் கர்த்தரே இறங்கி உலாவி அவர்களுக்கு வழி உண்டாக்கினார். அவர்கள் மகிழ்ச்சியோடு சூளையில் உலாவினார்கள். கர்த்தர் அக்கினியின் உக்கிரத்தை அவித்துப்போட்டார். இராஜாவின் உள்ளத்தில் பேசி உயர்ந்த நிலைமைக்கு கொண்டுபோனார்.
தேவபிள்ளைகளே, வனாந்தரத்தில் வழிகளையும் அவாந்தரவெளியில் ஆறுகளையும் உண்டாக்குகிறவர் நம் அருமை ஆண்டவர். உங்களுடைய வாழ்க்கையையும் அவர் செழிப்பாய் மாற்றுவார். இதோ புதிய பாதை தெரிகிறது. கர்த்தர் புதிய வாசலைத் திறக்கிறார். ஒருவனும் அதைப்பூட்டமாட்டான்.
நினைவிற்கு:- “வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்” (ஏசா. 35:6,7).
