No products in the cart.
ஏப்ரல் 16 – வாசல்களைத் திறக்கிறவர்!
“பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது:” (வெளி. 3:7).
நாம் ஆராதிக்கிற தேவன் எப்படிப்பட்டவர்? அவர் தாவீதின் திறவுகோலை உடையவரும், பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும், திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவருமானவர். அவர் ஒரு வாசலை திறப்பாரானால் எந்த மனிதனாலும் அதை அடைக்கவே முடியாது. அப்படியே, அவர் ஒரு வாசலை அடைப்பாரானால் எந்த தேவதூதனாலும் சரி அதைத் திறக்கமுடியாது.
கர்த்தர் சொல்லுகிறார், “தாவீதினுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்” (ஏசா. 22:22).
இன்றைக்கு வீடுகளைப் பூட்டவும் திறக்கவும் பலவிதமான பூட்டுசாவிகள் வந்துவிட்டன. அந்த காலத்தில் தோளிலே சுமக்கக்கூடிய மிகப் பெரிய சாவிகளை பயன்படுத்தினார்கள். அதிலும் தாவீதின் வீட்டுக்கு எத்தனைப் பெரிய திறவுகோல் இருந்திருக்கக்கூடும்? இன்றைக்கு தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து தம்முடைய கைகளில் அநேக திறவுகோல்களை வைத்திருக்கிறார்.
நம்முடைய வாழ்க்கையில் முதல்முதலாக அவர் திறந்து கொடுத்த திறவுகோல் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பாகும். பின்பு தெய்வீக சமாதானம் என்ற திறவுகோலைப் பயன்படுத்தி மெய்யான சமாதானத்தை அருளுகிறார். மூன்றாவதாக, நித்திய ஜீவன். நான்காவதாக, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம். பின்பு தெய்வீக சுகம், ஆவியின் வரங்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றையெல்லாம் நமக்குத் திறந்துகொடுத்திருக்கிறார்.
ஒரு பக்கத்தில் அவருடைய திறவுகோலானது மூடின வாசல்களை நமக்குத் திறந்து தருகிறது. ஆம், பரலோக வாசலை, அவர் நமக்காகத் திறந்தார். தேவனோடுள்ள ஐக்கியத்தைத் திறந்துகொடுத்தார். நம்முடைய ஜெபம் கேட்கப்படும்படியான அனுகூலமான வாசலைத் திறந்தார்.
அதே நேரம் திறவுகோல்களைப் பயன்படுத்தி வேண்டாத காரியங்களை அடைத்தும் போட்டார். மரண வாசலை மூடினார். பாதாள வாசலை அடைத்தார். நமக்கு எதிராய் இருந்த எல்லா தீமையான சக்திகளையும் நம்மைவிட்டு நீக்கி இருளிலே அவைகளைத் தள்ளி அடைத்துப்போட்டார். “நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” என்று திருவுளம்பற்றுகிறார் (வெளி. 1:18).
இன்றைக்கு உங்களுக்கு ஒரு புதிய வாசலைத் திறக்கப்போகிறார். அது ஆசீர்வாதமான வாசல். பெர்சியா தேசத்திலே எஸ்தருக்காக அனுகூலமான வாசலைத் திறந்தார். தானியேலுக்கு பாபிலோனிலே மேன்மையான வாசலைத் திறந்தார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுக்கு அக்கினிச் சூளையிலிருந்து வெளியே வரும்படி வாசலைத் திறந்தார். சிறைச்சேதம்பண்ணுவதற்காக சிறையிலே அப். பேதுரு அடைக்கப்பட்டிருந்தபோது அந்த கதவுகளை உடைத்து விடுதலையின் வாசலைத் திறந்தார்.
தேவபிள்ளைகளே, உங்களுக்கும் அவ்விதமான அனுகூலமான வாசல்களைத் திறக்கும்படி தேவன் சித்தங்கொண்டிருக்கிறார்.
நினைவிற்கு:- “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” (வெளி. 3:20).
