No products in the cart.
ஆகஸ்ட் 10 – தேவனை தரிசிக்கும்படி!
“யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபி. 12:14).
பரிசுத்தமில்லாமல் ஒருக்காலமும் ஒருவனால் தேவனைக் காணமுடியாது என்று வேதம் திட்டமும் தெளிவுமாய்க் கூறுவதால் நாம் அவசியம் பரிசுத்தமாய் வாழவேண்டும். ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் பரிசுத்தம் மிகவும் முக்கியமானது. அந்த பரிசுத்தம் தேவனைத் தரிசிக்கவும், அவரோடு வழி நடக்கவும், உதவி செய்கிறது. வேதம் சொல்லுகிறது, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத். 5:8).
ஒரு இராஜாவின் கலியாண வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டுமானால் தூய்மையான ஆடை அணிந்திருப்பது கட்டாயம். பெரிய பெரிய அலுவலகங்களுக்குள் செல்ல வேண்டுமென்றால், அதற்குரிய தகுதியான வஸ்திரம் உடுத்தியிருக்க வேண்டும். அதுபோல பரிசுத்த வஸ்திரமில்லாமல் தேவனுடைய பிரசன்னத்தில் செல்லுவது என்பது இயலாத காரியம்.
தேவனைத் தரிசிப்பது என்றால் என்ன? பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பாருங்கள். அவர்கள் தேவனோடு சஞ்சரித்தார்கள்; தேவனோடு நடந்தார்கள். ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தார் (ஆதி 5:24). நோவா சஞ்சரித்துக்கொண்டிருந்தார் (ஆதி. 6:9). ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டார் (யாக். 2:23). தேவனாகிய கர்த்தர் மோசேயோடுகூட முகமுகமாய்ப் பேசினார் (யாத். 33:11) என்றெல்லாம் வேதத்திலே வாசிக்கிறோம்.
தேவனைத் தரிசிப்பதும், அவரோடு நடப்பதுமே உங்கள் வாழ்க்கையின் நோக்கமாய் இருக்கட்டும். காணிக்கையும் தசமபாகமும் கொடுப்பதினால் அவரைத் தரிசித்துவிடமுடியாது. ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதினால் அவரைத் தரிசித்துவிடமுடியாது. இரவும் பகலும் ஓடிஓடி உழைப்பதினால் அவரைத் தரிசித்துவிடமுடியாது. பரிசுத்தமாய் இருந்தால் மாத்திரமே அவரைத் தரிசிக்க முடியும்.
தாவீதுக்கு தேவனைத் தரிசிக்கவேண்டுமே என்ற வாஞ்சை இருந்தது. அவர் எழுதுகிறார்: “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன், …இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்” என்று குறிப்பிடுகிறார் (சங். 63:1,2). ‘உம்மைப் பார்க்க ஆசையாய் இருந்தது’ என்று தாவீது வாஞ்சையுடன் சொல்லுவதைப் பாருங்கள். அவரைத் தரிசிக்க வாஞ்சையாயிருந்தேன். அதுதான் தாவீதின் ஏக்கமும் வாஞ்சையுமாகும்.
பரிசுத்த வாழ்க்கை வாழுவதின் இரகசியம், அதிகாலமே வாஞ்சையோடு கிறிஸ்துவைத் தேடி தரிசிக்க முற்படுவதுதான். இயேசுவைப் பாருங்கள். அவர் அதிகாலமே வாஞ்சையோடு பிதாவின் முகத்தைத் தேடினார். அதிக இருட்டோடே எழுந்து ஜெபிக்கச் சென்றார்.
தேவபிள்ளைகளே, இயேசுகிறிஸ்துவே அதிக இருட்டோடே தேவனைத் தரிசிக்க நடந்து சென்றார் என்றால், நீங்கள் இன்னும் எவ்வளவு அதிகமாய் இந்த காரியத்தில் வாஞ்சைகொள்ளவேண்டும் என்பதைச் சிந்தியுங்கள்.
நினைவிற்கு:- “தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின” (வெளி. 15:4).