bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

மே 28 – தேவ பிரசன்னமும், பாடுகளும்!

“என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:2,3).

பாடுகளின் நேரத்தில் பலர் பதறிப்போய்விடுகிறார்கள். தாக்குப்பிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு சிலர் கிறிஸ்துவையே மறுதலித்துவிட்டு பின்வாங்கிப் போய்விடுகிறார்கள். பாடுகளின் நேரத்திலும்கூட தேவ பிரசன்னத்தை அனுபவிப்பது ஒரு இனிமையானதும் மேன்மையானதுமான அனுபவமாகும்.

ஆகவேதான், அப். யாக்கோபு ‘சோதனைகளில் அகப்படும்போது அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்’ என்று ஆலோசனை கூறுகிறார். பாடுகளில் களிகூரும்போது சாத்தான் வெட்கப்பட்டுப்போய்விடுவான். தேவனுடைய பிரசன்னம் அளவில்லாமல் உங்களை நிரப்ப ஆரம்பித்துவிடும்.

இயேசு கிறிஸ்து நாற்பது நாட்கள் உபவாசமிருந்து ஜெபித்தபோது, சோதனைக்காரன் அவரை சோதிக்க முற்பட்டான். சாத்தானுடைய சோதனைகள் கடினமானவையாக இருந்திருக்கக்கூடும். ஆனால், கர்த்தரோ அந்த சோதனைகளில் ஜெயம் பெற்றார்.

வேதம் சொல்லுகிறது, “அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவ தூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்தார்கள்” (மத். 4 :11). பாடுகளுக்குப் பின்பாக தேவ தூதர்களின் பணிவிடை இருக்கிறது. அன்பின் தேவனுடைய ஆறுதலும் அரவணைப்பும் இருக்கின்றன.

தேவபிள்ளைகளே, பாடுகளும், உபத்திரவங்களும் உங்களிடத்தில் வரும்போது அவைகளை எதிரிகளாக எண்ணி முறுமுறுக்காதிருங்கள். நண்பர்களாக எண்ணி வரவேற்பு கொடுங்கள். உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும், கர்த்தர்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்த உங்களுக்குக் கிடைத்த பொன்னான தருணங்களாக அவைகளை எண்ணிக்கொள்ளுங்கள்.

யோபு பக்தனைவிட அதிகமாக ஒருவர் பாடுகளைச் சந்தித்திருக்கமுடியாது. அவர் ஆடுமாடுகளை இழந்தார். தனது ஏழு குமாரர்களையும், மூன்று குமாரத்திகளையும் ஒரே நேரத்தில் இழந்தார். பருக்களின் தொல்லை வேறு. அவ்வளவு பாடுகள் இருப்பினும் தேவ பிரசன்னத்தைவிட்டு அவரைப் பிரிக்க முடியவில்லை. காரணம் என்ன? யோபு பக்தன் சொன்னார், “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு. 23:10). ‘சோதனைக்கு அப்பால் நான் புடமிடப்பட்ட பொன்னைப்போல பிரகாசிப்பேன்’ என்ற உறுதி அவருக்கு இருந்ததினால் பாடுகள் அவரை துவண்டுவிடச்செய்யவில்லை. தேவ பிரசன்னத்திலே நிலைத்து நின்றார்.

தேவபிள்ளைகளே, இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். தமக்குமுன் இருந்த சந்தோஷத்தின்பொருட்டு அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் அல்லவா? அவரே உங்கள் பாவங்களைக் கழுவி, சுத்தப்படுத்தி, உங்களைக் கரம்பிடித்து வழிநடத்துவார்.

வேதம் சொல்லுகிறது, “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபி. 12:2).

நினைவிற்கு:- “என் கிருபை உனக்குப் போதும், பெலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும்” (2 கொரி. 12:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.