bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

மே 28 – அசைக்கும் ஜெபம்!

“அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்” (அப். 4:31).

ஆதி அப்போஸ்தலர்கள் ஜெபித்த ஜெபத்தைப் பாருங்கள். கூடியிருந்த இடம் அசைகிறவரையிலும், உள்ளங்கள் அசைகிறவரையிலும், சிறைக் கதவுகள் திறக்கிறவரையிலும், எழுப்புதலால் தேசம் குலுங்குகிறவரையிலும் அவர்கள் ஜெபித்தார்கள். ஆதித்திருச்சபை ஜெபிக்கிற திருச்சபையாயும், உபவாசிக்கிற திருச்சபையாயும், கண்ணீரோடு மன்றாடுகிற திருச்சபையாயும் இருந்தது. ஆகவேதான் பலத்த அற்புதங்களும் அடையாளங்களும் அங்கே நடந்தன. திரளான ஜனங்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.

நீங்கள் ஜெபிக்கிறீர்களா? வல்லமையோடும், ஊக்கத்தோடும் ஜெபிக்கிறீர்களா? உங்கள் ஜெபம்தான் குடும்பங்களையும் சபைகளையும் தேசத்தையும் அசைக்கும். உங்கள் ஜெபம்தான் உள்ளான மனுஷனிலே உங்களை பலமுள்ளவர்களாய் மாற்றும். உங்கள் ஜெப ஜீவியத்தைப்பொறுத்துதான் உங்கள் பரிசுத்த வாழ்க்கையும், வெற்றியின் வாழ்க்கையும் அமையும். ஜெபிப்பதைப் பொறுத்துதான் வல்லமையான ஊழியமும் அமையும்.

குறைந்த ஜெபத்துக்கு குறைந்த வல்லமைதான் உண்டு. அதிக ஜெபம்தான் அதிக வல்லமையைத் தரும். ஜெபமே இல்லை என்றால் வல்லமையே இல்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் தேவனுக்குமுன்பாக முழங்காலில் நிற்கும்போது உலக மனிதரைக்குறித்து பயப்படமாட்டீர்கள். ஜெபிக்கிற உங்களை தேவன் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போல் விளங்கச்செய்வார்.

ஆதித்திருச்சபையினர் ஜெபம்பண்ணியதுடன் ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருந்தார்கள். பரிசுத்த ஆவியினுடைய அபிஷேகம் தங்களிலே இறங்கும்படிக்கு அவர்கள் மேல்வீட்டறையிலே தொடர்ந்து ஜெபத்திலே தரித்திருந்து பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெற்றுக்கொண்டார்கள். உன்னதத்திலிருந்து வருகிற பெலனால் தரிப்பிக்கப்பட்டார்கள். திருச்சபை வரலாற்றிலே புதிய அத்தியாயத்தை மகிமையாய் திறந்து வைத்தார்கள்.

இன்றைக்கும் உங்களை ஜெபிக்கும்படி ஆவியானவர் அழைக்கிறார். மன்றாடும்படி ஏவி எழுப்புகிறார். கண்ணீரோடு தேசத்துக்காக உபவாசிக்கும்படி உங்கள் உள்ளங்களை கொழுந்துவிட்டு எரியச்செய்கிறார். கடைசிநாட்களில் பின்மாரியின் அபிஷேகம் ஊற்றப்படும்போது ஜெபவீரர்கள் நிச்சயமாகவே எழும்புவார்கள்.

ஒரு பக்கம் குமாரர்களும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். மறுபக்கம் மூப்பர்கள் சொப்பனங்களையும், வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பார்கள். இன்னொரு பக்கத்தில் கர்த்தர் கிருபையின் ஆவியையும் விண்ணப்பத்தின் ஆவியையும் ஜனங்கள்மேல் ஊற்றுவார். கர்த்தர் சொல்லுகிறார், “நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்” (சக. 12:10).

தேவபிள்ளைகளே, ஜெபிக்க ஆரம்பித்துவிடுங்கள். ஆவியோடும் உண்மையோடும் ஜெபிக்க ஆரம்பித்துவிடுங்கள். கிருபையின் ஆவியினாலும் விண்ணப்பத்தின் ஆவியினாலும் நிரம்பி ஜெபிக்க ஆரம்பித்துவிடுங்கள்.

நினைவிற்கு:- “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” (ரோம. 12:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.