Appam, Appam - Tamil

மே 06 – வெளிச்சம் உண்டாகக்கடவது!

“தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று” (ஆதி. 1:3).

வெளிச்சமாயிருகிற தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து, வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடத்த விரும்பினார். ஆகவே அவர் அன்போடு நம்மை நினைவுகூர்ந்து நமக்காக வெளிச்சம் உண்டாகக்கடவது என்று சொன்னார். அந்த வெளிச்சம் எத்தனை மகிமையானது!

தேவன் சிருஷ்டித்த எல்லாச் சிருஷ்டிப்புகளிலும் வெளிச்சமே தலையாய் இருக்கிறது. வெளிச்சம் இல்லாவிட்டால் அனைத்தும் அந்தகாரத்தின் காரியங்களுக்குள் அல்லவா மூழ்கிக்கிடக்கும். ஆகவே எல்லாச் சிருஷ்டிப்புக்கும் முதலாவதாக முதல் நாளில்தானே கர்த்தர் வெளிச்சத்தைச் சிருஷ்டிக்க சித்தம்கொண்டார்.

வெளிச்சத்தைக் காணாத குருடரை நாம் காணும்போது, அவர்களுக்காக எவ்வளவு பரிதாபப்படுகிறோம். கை, கால்கள், முடமாய் இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் கண்கள் மாத்திரம் குருடாய்ப்போய்விடக்கூடாது என்று சொல்லி அனுதாபப்படுகிறோம்.

வெளிச்சத்தைச் சிருஷ்டித்த ஆண்டவர் இந்த வெளிச்சத்தைக் கண்டுகளிக்கும்படி நமக்கு கண்களையும் சிருஷ்டித்தார். அழகிய மலைகள், பள்ளத்தாக்குகள், மலர்கள், மரங்கள், பறவைகள் எல்லாவற்றையும் கண்டு அனுபவிக்க கர்த்தர் நமக்கு உதவிசெய்தார்.

மட்டுமல்ல, நம்முடைய அகக்கண்களைத் திறந்து அந்தப் பிரகாசமான மனக்கண்களினாலே பரலோகத்திலுள்ளவைகளையும், பரலோக தேவனையும் கண்குளிர தரிசிக்க கிருபைசெய்தார்.

அப். பவுல் சொல்லுகிறார்; “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2 கொரி. 4:6).

ஒருவன் மறுபடியும் பிறக்கும்போது, கர்த்தர் அவனுடைய இருதயத்திலே பிரகாசிக்கிறார். இரட்சிக்கப்பட்ட தேவனுடைய எல்லா பிள்ளைகளின் சாட்சியும் இதுதான். அந்த வெளிச்சத்தின் ஒளியிலேதானே பிதாவாகிய தேவனைக் கண்டுகொள்ளுகிறோம். நமக்காக இரத்தம் சிந்தி மரித்த இயேசுவை அறிந்துகொள்ளுகிறோம். அவரை, “அப்பா, பிதாவே” என்று புத்திர சுவிகாரத்தோடு அழைக்கிறோம்.

இயேசு சொன்னார், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவா. 8:12). “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று சொல்லி இருளிலிருந்து வெளிச்சத்தை வீசச்செய்த தேவன், உங்களையும் உங்களுடைய குடும்பத்தையும், தம்முடைய மகிமையின் ஒளியினால் நிரப்புவாராக!

உலகத்திலுள்ள எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்ககூடிய அந்த மெய்யான ஒளியானவர் உங்கள் வாழ்க்கையையும் முழுவதுமாக பிரகாசிக்கச்செய்வாராக. இன்றைக்கு ஜனங்களுக்கு ஒரு ஒளி உண்டு. அதுதான் சுவிசேஷத்தின் ஒளி. அது தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி (2 கொரி. 4:4).

தேவபிள்ளைகளே, அந்த ஒளி உங்களைப் பிரகாசிக்கச்செய்வதைக்குறித்து திருப்தியடைந்துவிடாதீர்கள். உங்களுக்கு இன்னுமொரு முக்கிய கடமையுண்டு. கிறிஸ்துவை அறியாதவர்கள் அநேகர் உலகில் இருக்கின்றனர். அவர்களையும் பிரகாசிக்கச்செய்யும்படி அந்த ஒளியினிடத்திற்கு கொண்டுவரவேண்டியது உங்கள் தோளின்மேல் விழுந்த கடமையல்லவா?

நினைவிற்கு:- “இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபே. 5:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.