No products in the cart.
மார்ச் 31 – தீங்கு நினையாது!
“அன்பு …. தீங்கு நினையாது” (1 கொரி. 13:5).
ஒருவர் செய்த தீங்கை மறவாமல், மன்னியாமல் அவருக்கு பழிக்குப்பழி தீங்கு செய்யும்படி எண்ணிக்கொண்டேயிருப்பது அன்பின் சுபாவமல்ல. அன்பு மன்னித்து மறக்கிறது. அது ஒருபோதும் தீங்கு நினையாது. எல்லா மிருகங்களிலும் யானை மிகவும் ஞாபக சக்தியுள்ளது என்பதுடன் மற்றவர்கள் செய்த தீமையை எத்தனை ஆண்டு காலமானாலும் மறக்காமல் தன் உள்ளத்திலேயே அது வைத்திருக்குமாம்.
ஒருமுறை ஒரு சிறுவன் ஒரு யானைக்கு ஒரு தேங்காயைக் கொடுப்பதுபோல கொடுத்தான். யானை அதை ஆவலாய் உட்கொள்ள உடைத்தபோது உள்ளே முழுவதும் சுண்ணாம்பு இருந்தது. யானையின் துதிக்கை அந்த சுண்ணாம்பினால் வெந்துபோனது. அந்த யானை இச்சம்பவத்தை மறக்கவேயில்லை.
பல ஆண்டுகளுக்குப்பின் அந்த சிறுவன் வாலிபனாய் மாறியபிறகும், அந்த யானை ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில் அவனை அடையாளம்கண்டு துரத்திக்கொண்டுபோய் மிதித்துக்கொன்றது. இப்படித்தான் இன்று அநேகர் கசப்போடும், வைராக்கியத்தோடும், பழிவாங்கும் எண்ணத்தோடும் திரிகிறார்கள்.
அன்பு ஒருபோதும் தீங்கு நினைப்பதில்லை. தேவபிள்ளைகளே, தெய்வீக அன்போடு நீங்கள் பிறரது குற்றங்களை மன்னிப்பதுடன் மறந்தும்விடுங்கள். வேதம் சொல்லுகிறது, “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னிப்பதுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபே. 4:32).
ஒரு திருடனைத் துரத்திக்கொண்டு சென்ற ஒரு காவல்துறை அதிகாரி அவன் ஓடுகிற வேகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். காரணம், அவன் ஓடின வேகம் ஒலிம்பிக் வீரனின் வேகத்தைவிடவும் அதிகமாயிருந்தது. ஆகவே அந்த அதிகாரி அந்த திருடனைப் பிடித்து தண்டித்து சிறையிலடைக்காமல், ஒரு ஓட்டப்பந்தய வீரனாக்க விரும்பினார்.
ஆகவே ஓடுகின்ற அந்த திருடனை அன்புடன் நிற்கும்படி ஒலிப்பெருக்கியின் மூலம் கேட்டுக்கொண்டார். தண்டனை தருவதில்லை என்ற உறுதிமொழியும் கொடுத்தார். பயந்து, உயிருக்காக அஞ்சி ஓடிய திருடன் நின்றதும், அந்த அதிகாரி அவனைத் தட்டிக்கொடுத்து, ‘உன் வேகமான ஓட்டத்தை மெச்சுகிறேன்’ என்றார். மட்டுமல்ல, அவனுக்கு உடை, விசேஷ உணவுடன் அன்பையும் தேச பக்தியையும் ஊட்டி தன் தேசத்தின் சார்பில் ஒலிம்பிக்கில் ஓடவிட்டு தேசத்திற்கு புகழைச் சேர்த்தார்.
மனுஷன் பாவஞ்செய்து பரிசுத்த தேவனைச் சந்திக்க இயலாமல் விருட்சங்களுக்குள் ஒளிந்துகொண்டான். தேவ சமுகத்திற்கு விலகி ஓடினான். தேவ தண்டனைக்கும் நியாயத்தீர்புக்கும் பயந்தான். ஆனால் கிறிஸ்துவோ நம்மை அன்புடன் தேடி வந்தார். அவர் வந்தது நம்மைப் பிடித்து ஆக்கினைத் தீர்ப்பாகிய தண்டனையைத் தருவதற்காக அல்ல. நம்மேல் அன்புகூர்ந்து நம்மைத் தமது பிள்ளைகளாக்கிக்கொள்ளவே வந்தார்.
தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும் அந்த அன்பை செயல்படுத்துங்கள். உங்களுடைய உள்ளத்திலிருந்து அன்பின் ஆறுகள் புறப்பட்டு அன்பின் நேசராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கியும், சகோதர சகோதரிகளை நோக்கியும் கடந்துசெல்லட்டும். அன்பு ஒருபோதும் தீங்கு நினையாது. அது தியாகமே செய்யும்.
நினைவிற்கு:- “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” (யோவா. 3:17).
