No products in the cart.
மார்ச் 30 – அன்பு சினமடையாது!
“அன்பு …. சினமடையாது” (1 கொரி. 13:5).
சினம் என்பது, தோல்வியின் அறிகுறி. சினத்தை மேற்கொள்ளுகிறவனே ஜெயங்கொள்ளுகிறவன். ஒருவன்மேல் மற்றவர்கள் குற்றஞ்சாட்டி பழிசுமத்தும்போது, அவனைப் பரிகசிக்கும்போது அவன் சினத்திற்கு இடங்கொடாமல் தெய்வீக அன்போடு நடந்துகொள்வானானால், அவனே சோதனையை வென்றவனாவான். எந்த ஒரு மனுஷன் சினத்தை அன்பினால் மேற்கொள்ளுகிறானோ, அவனே எப்பொழுதும், எல்லாச் சூழ்நிலைகளிலும் ஜெயங்கொண்டவனாயிருப்பான்.
ஒரு அருமையான சகோதரியைத் திருமணம் செய்தவனோ, மிருகத்தனமானவனாயிருந்தான். அவளது பணத்துக்காகவே அவளைத் திருமணம் செய்திருந்தான். ஒரு நாள் காலையில் சிறு பிரச்சனையினிமித்தம் அவன் அவளை அடித்து உதைத்துவிட்டு வெளியே போய்விட்டான். மதியம் வீடு திரும்பியபோது மேஜையில் மனைவி தனக்கென்று உணவு வைத்திருப்பதைக்கண்டு பிரமித்துப்போனான். அவனது மனைவி அவனை அன்போடு அழைத்து உணவுப் பரிமாற உட்காரவைத்தாள்.
நான் உன்னை காலையில் அதிகமாகக் காயப்படுத்திவிட்டேனோ என்று கணவன் கேட்டபோது அந்த மனைவி சொன்ன பதில் அவன் உள்ளத்தைத் தொட்டது. அவள் சொன்னாள்: ‘நீங்கள் என்னை அடிக்கவேயில்லை. உங்களைத்தான் அடித்தீர்கள். அன்று ஆலயத்தில் தேவ சமுகத்தில் என் கையை உங்கள் கையில் ஒப்புவித்தபோதே என் உடல் முழுவதும் உங்களுக்குச் சொந்தமாகிவிட்டது. தேவனும் 1 கொரி. 7:4-ல் என் சரீரத்திற்கு நீங்களே அதிகாரி என்று தெளிவாய்க் கூறியிருக்கிறார் பாருங்கள். தேவன் எனக்குத் தந்த தலை நீங்கள், நான் உங்கள் உடைமை. என்னை அடிக்கவோ மிதிக்கவோ உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் என்ன செய்தாலும் எனக்கு இந்த உலகத்தில் நேசிக்க உங்களைத்தவிர வேறு எவரையும் தேவன் தரவில்லையே’ என்றாள். இந்த வார்த்தைகளைப் பேசிவிட்டு அவள் அவனைப் பார்த்தாள். அவனோ உள்ளம் உடைந்து மனம் கசந்து அழுதுகொண்டிருந்தான். அன்றுமுதல் அந்தக் குடும்பம் ஆழமான அன்பினால் கட்டப்பட்டு எழும்பியது.
இயேசுவை சிலுவையிலே நோக்கிப்பாருங்கள். எவ்வளவு நிந்தைகள், எவ்வளவு அவமானங்கள், எவ்வளவு பரியாசங்கள்! அதோடன்றி, சவுக்குகளினாலும், கோலினாலும் அடிக்கப்பட்டாரே. ஆணிகளால் கடாவுண்டாரே. அவர் சினமடைந்தாரா? இல்லவேயில்லை. மாறாக அவரைப் பாடுபடுத்தினவர்களுக்காக அவர் பிதாவை நோக்கி, “பிதாவே, இவர்களை மன்னியும்” என்று வேண்டிக்கொண்டாரல்லவா? அதுதான் சினத்தை மேற்கொள்ளும் வழி.
அன்பு திரளான பாவங்களை மூடும். பாவங்கள் மூடப்படும்போது சினத்துக்கோ, மூர்க்கத்தனத்துக்கோ அங்கே இடமில்லை. சண்டைக்கோ, பிரிவினைக்கோ அங்கே பேச்சேயில்லை. அன்பு தெய்வீக ஆளுகை செய்யும். விசேஷமாக இயேசு இந்த உலகத்தைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவற்கு முன்பு பலமுறை சீஷர்களைப் பார்த்து, “ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்” என்று சொன்னார். அதற்கு தாமே முன்மாதிரியாக விளங்கினார்.
இயேசு சொன்னார், “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது” (யோவா. 15:12). தேவபிள்ளைகளே, கோபத்தையும், சினத்தையும் அன்பினால் மேற்கொள்ளுபவர்களாக இருக்க நாம் முயலவேண்டும்.
நினைவிற்கு:- “அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது” (ரோம. 13:10).
