No products in the cart.
மார்ச் 26 – தன்னைப் புகழாது!
“அன்பு தன்னைப் புகழாது” (1 கொரி. 13:4).
அன்பு தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுவதில்லை. விளம்பரம் தேடுவதில்லை. அன்புள்ளவர்கள் பேர்புகழை எதிர்பாராமல் பின்னணியில் மறைந்திருந்து நன்மை செய்துகொண்டேயிருப்பார்கள்.
நாட்டுக்கோழியானது ஒரு முட்டையிட்டுவிட்டால் போதும், கொக்கரித்து சத்தமிட்டு, அரைமணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்துவிடும். ஆனால் வாத்தைப் பாருங்கள். கோழியைவிட பெரிய முட்டையிட்டாலும்கூட, பெருமைபாராட்டாமல் அமைதியாயிருக்கும். வேதம் சொல்லுகிறது, “மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்” (2 கொரி. 10:17,18).
அன்புள்ள இயேசுவை நோக்கிப்பாருங்கள். அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார். குஷ்டரோகிகளை சொஸ்தமாக்கினார். மரித்தோரை உயிரோடு எழுப்பினார். பல வேளைகளில் நன்மை பெற்றவர்களிடம் அதை யாருக்கும் அறிவிக்கவேவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஜனங்கள் அவரை இராஜாவாக்க எண்ணியிருக்கையில் அவர்கள் மத்தியிலிருந்து மறைந்துபோனார். தற்புகழை விரும்பாத அன்பின் நேசரவர்.
தன்னைப் புகழாத அன்பு கிறிஸ்துவின் அன்பு. அந்த அன்புதான் அவரைப் பரலோகத்தைவிட்டு பூமிக்குக் கொண்டுவந்தது. கிறிஸ்துவின் அன்பு பாவங்களும், துரோகங்களும் நிறைந்த மக்கள்மத்தியில் அவரைக்கொண்டுவந்தது. கிறிஸ்துவின் அன்பு, அவரை அடிமையின் ரூபமெடுக்கச்செய்தது. அந்த அன்பு பாவிகளாகிய நம்மை மீட்டதினால் நாம் அழிந்துபோகிற ஆத்துமாக்களை மீட்க எந்த தியாகமும் செய்ய ஆயத்தமாயிருக்கவேண்டும்.
ஜான் ஸ்மித் என்ற ஊழியர் ஒருபோதும் புகழை எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை அவர் தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு “தெளிவான பாதையைக் கர்த்தர் எனக்கு அருளினார். அழிந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களின் விலையைக் காண்பதால் என் இருதயம் நொறுங்கிக்கொண்டிருக்கிறது. ஆத்துமாக்கள் இரட்சிப்படைய கூடாதாகில், நான் உயிர் வாழ்ந்தும் பிரயோஜனமில்லை. ஆம் கர்த்தாவே, ஆத்துமாக்களைத் தாரும் அல்லது நான் மடிந்துபோகிறேன்” என்று கதறி கதறி அழுதாராம்.
திரும்பி வரக்கூடாத அக்கினிக்கடலுக்கு நேராக எவ்வித உணர்வுமின்றி உல்லாசமாய் சென்றுகொண்டிருக்கும் ஆத்துமாக்களின் நிலையைக் காணும் கண்களையும், அவர்களை நோக்கி அன்பின் கரிசனையோடு நடக்கும் பாதங்களையும் கர்த்தர் நமக்குத் தந்தருளுவாராக. கர்த்தர்தாமே தேவஅன்பினால் நம் நினைவுகள், சிந்தைகள், செயல்கள் எல்லாவற்றையும் நிரப்புவாராக. கல்வாரி அன்பை உயர்த்திக்காட்டி ஆத்தும ஆதாயஞ்செய்யும் கிருபைகளைத் தந்தருளுவாராக.
கிறிஸ்துவின் அன்பை உண்மையாய் ருசித்தவர்களின் உள்ளங்களில் அழிந்துபோகும் ஆத்துமாக்களைக்குறித்த பாரமும், கவலையும் எப்பொழுதும் ஒரு பாரச்சுமைபோல அழுத்திக்கொண்டேயிருக்கும். அங்கு தற்புகழ்ச்சிக்கு இடமில்லை. தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவட்டும்.
நினைவிற்கு:- “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்” (2 கொரி. 4:5).
