Appam, Appam - Tamil

மார்ச் 21 – கலக்கமும், பிசாசும்!

“தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்” (சங். 68:1).

பிசாசானவன் சமாதானத்தை இழக்கச்செய்து கலக்கங்களையும், பயங்களையும் உள்ளத்தில் கொண்டுவருகிறான். ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் அவனுக்கு பயப்படவோ, கலங்கவோ வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நீங்கள் கர்த்தருடைய பட்சத்தில் நிற்கிறீர்கள். இயேசு கிறிஸ்து கல்வாரிச் சிலுவையிலே சத்துருவாகிய பிசாசைத் தோற்கடித்து, அவன் தலையை நசுக்கி, அவன்மேல் உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஆகவே “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” (1 பேது. 5:9). “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” (யாக். 4:7).

சில வேளைகளில் சத்துரு, மனுஷர்மூலமாய் உங்களுக்கு எதிரான கலக்கங்களைக் கொண்டுவரக்கூடும். குடிகாரக் கணவர், இரட்சிக்கப்படாத பிள்ளைகள், உங்களை வன்கண்ணாய்ப் பகைக்கும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், மற்றும் பொறாமைகொண்ட மேலதிகாரிகள் உங்களைக் கலங்கச்செய்யலாம். ஆனால் கர்த்தர் உங்கள் வலதுகரத்தைப் பிடித்து, “உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்” (கலா. 5:10) என்று சொல்லுகிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசிகளுக்கு எழுதும்போது, “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்” (எபே. 6:11) என்று எழுதுகிறார்.

ஒரு வன்முறைக்கூட்டம் இருக்கிற இடத்திலே திடீரென்று ஒரு போலீஸ் வாகனம் வந்து, அதிலுள்ள போலீஸ் அதிகாரி வானத்தை நோக்கி இரண்டு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டால் அவர்கள் அனைவரும் பயந்து, அலறியடித்து, தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். எல்லா அராஜகமும் ஒழிந்துபோகும்.

கர்த்தர் எழுந்தருளும் வரை சத்துருக்கள் நின்றுகொண்டுதான் இருப்பார்கள். சவால் விட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் கர்த்தர் உங்களுக்காக வைராக்கியமாய் எழும்பும்போது, அவர்கள் எல்லாரும் சூரியனைக்கண்ட பனிபோல மறைந்துபோவார்கள். பூனையைக்கண்ட சுண்டெலி பல்வேறு திசைகளில் ஓடி மறைவதுபோல உங்கள் சத்துருக்களும், பகைவர்களும் ஓடி மறைவார்கள்.

அன்றைக்குக் கர்த்தர் எழுந்தருளி இஸ்ரவேலர்களை கானானுக்கு நேராய் அழைத்துக்கொண்டுபோனபோது, யாராலும் அவரைத் தடுக்கமுடியவில்லை. கானானில் இருந்த ஏழு ஜாதிகளும், முப்பத்தொரு ராஜாக்களும் சிதறுண்டுபோனார்கள். ஆகவே பிசாசைக்குறித்தோ, சாத்தானைக்குறித்தோ பயப்படாதிருங்கள்.

“சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்” (ரோம. 16:20) என்ற வசனத்தின்படி, கர்த்தர் உங்களுக்காக வழக்காடி யுத்தம் செய்யவேண்டுமென்றால் நீங்கள் தேவனுக்குமுன்பாக நல்மனசாட்சியுள்ளவர்களாய் உங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்பொருட்டு விசுவாசத்தின் உறுதியும், கீழ்ப்படிதலும், தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களும் உங்களுக்குத் தேவை. அவற்றைப் பெற்றுக்கொள்ள இன்றே முனைப்புடன் செயல்படுங்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் நிச்சயமாகவே கலக்கங்களும், திகில்களும் நீங்கி சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெறுவீர்கள்.

நினைவிற்கு:- “சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்” (சங். 91:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.