No products in the cart.
மார்ச் 18 – அன்புகூர்ந்தார்!
“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்” (வெளி. 1:6).
உங்களில் அன்புகூர்ந்த கிறிஸ்துவின் அன்பை தியானித்துப்பாருங்கள். உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே அவர் உங்களில் அன்புகூர்ந்துவிட்டார். நீங்கள் அவரைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே அவர் உங்களைத் தெரிந்துகொண்டார்.
தாயின் வயிற்றிலேயே அவர் உங்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டார். உங்களைப் பெயர் சொல்லி அழைத்தார். நீங்கள் அவரைவிட்டு தூரமாய்ப் போனபோதும் துக்கத்தோடும், வேதனையோடும் உங்கள் பின்னாக நடந்துவந்தார். நீங்கள் அவரை அசட்டை செய்து புறக்கணித்தவேளையிலும் கண்ணீர் நிறைந்த கண்களோடு உங்களைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார்.
மாத்திரமல்ல, உளையான பாவசேற்றிலிருந்து அவர் உங்களைத் தூக்கியெடுத்தார். கல்வாரிச் சிலுவையண்டை கொண்டுபோய் மாசற்ற, விலையேறப்பெற்ற இரத்தத்தை ஊற்றி உங்களைப் பாவங்களறக் கழுவினார், அக்கிரமங்களறச் சுத்திகரித்தார். மட்டுமல்ல, பிதாவாகிய தேவனுக்குமுன்பாக இராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினார். எவ்வளவு கிருபை! எவ்வளவு மனதுருக்கம்!
கப்பலிலே கேப்டனாகப் பணிபுரிந்த ஒரு சகோதரனை அறிவேன். அவர் உலகத்தின் உல்லாசங்களிலும், பாவ ஜீவியத்திலும் வாழ்ந்துவந்தார். அவர் கர்த்தரை எண்ணாமற்போனாலும் கர்த்தர் அவருக்கு எத்தனையோ அற்புதங்களைச் செய்து, எத்தனையோ விபத்துக்களிலிருந்து பாதுகாத்து வழிநடத்தினார். அவர் மாலுமியாய் நடத்திச் சென்ற சரக்குக்கப்பல் இன்னொரு கப்பலோடு மோதி தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் வந்தது. அதிலும் கர்த்தர் கிருபையாய் அவரைக் காப்பாற்றினார். ஆனால் அவரோ, கர்த்தருடைய அன்பை எண்ணிக்கூட பார்க்கவில்லை.
ஒருமுறை அவருக்கு பல இலட்சங்கள் நஷ்டம் ஏற்படுகிற ஒரு சூழ்நிலை வந்தது. அப்பொழுது ஒரு படிப்பறிவு இல்லாத தேவனுடைய ஊழியக்காரர் அவரிடம் வந்து, “ஐயா, நான் இன்று உங்களுக்காக ஜெபித்தபோது கர்த்தர் என்னிடம் இந்தமுறையும் அவனுக்கு நான் இரக்கம்செய்கிறேன். இந்தமுறையும் அவனைப் பிரச்சனையிலிருந்து விடுவிப்பேன்” என்று சொன்னார் என்றார்.
அதைக் கேட்டதும் அந்தக் கப்பல் கேப்டன் கதறி அழுதார். கர்த்தருடைய அன்பு அவருடைய உள்ளத்தை உருக்கிற்று. என்ன ஆச்சரியம்! அவருக்கு ஏற்படவேண்டிய நஷ்டம் ஏற்படாமல் கர்த்தர் ஒரு அற்புதமான வழியைத் திறந்தார். கர்த்தர் நல்லவர் என்பதை அன்றுதான் அந்த சகோதரர் ருசி பார்த்தார்.
அன்பு அன்பைக் கேட்கிறது. தேவனுடைய அன்பின் ஆழம் மனிதனுடைய அன்புக்காக ஏங்கி நிற்கிறது. பேதுருவின் வாழ்க்கையிலே எண்ணற்ற அற்புதங்களைச் செய்தவர், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று மனதுருகிக் கேட்பதை வேதத்தில் காண்கிறோம்.
தேவபிள்ளைகளே, இன்று அதே கேள்வியை கர்த்தர் உங்களிடமும் கேட்கிறார். நீங்கள் கர்த்தரை நேசிக்கிறீர்களா? முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவரில் அன்புகூருகிறீர்களா?
நினைவிற்கு:- “கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” (எபே. 5:2).
