No products in the cart.
மார்ச் 16 – நேசம் வலியது!
“நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது” (உன். 8:6).
உலகத்தில் உள்ள எல்லா ஆயுதங்களைப்பார்க்கிலும் அன்பே வலியது. அன்பினால் உந்தப்பட்டு, தாய் தன் பிள்ளைக்காக எந்த தியாகத்தையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறாள். அன்பினால் உந்தப்பட்டு இளம் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பல தியாகங்களைச் செய்கிறார்கள். ஒரு மனிதனுடைய எல்லா நல்ல குணாதிசயங்களிலும் அன்பே விசேஷமானது.
கிறிஸ்துவினுடைய அன்பை நாம் தியானிக்கும்போதெல்லாம் அது மகா தியாகமான அன்பு என்பதை உணருகிறோம். அவர் பரலோகத்தைவிட்டு பூமிக்கு இறங்கிவந்தது எவ்வளவு பெரிய தியாகம்! அவர் எவ்வளவு தியாகம் செய்து பாரமான சிலுவையை நமக்காகச் சுமந்தார். அவர் எவ்வளவாய் தியாகம் செய்து அவருடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் நமக்காக ஊற்றிக்கொடுத்தார்!
“அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருண்யத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே. 31:3). அவருடைய அன்பிலிருந்துதான் அவருடைய சிநேகம், காருணியம், தயவு, கிருபை ஆகிய அனைத்தும் வெளிப்படுகின்றன. அவருடைய அன்பு சுயநலமற்ற அன்பு. மட்டுமல்ல, தெய்வீகமான அன்பு, கபடற்ற அன்பு.
இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, இத்தாலியை அரசாண்ட முசோலினி ஒரு பெரிய சர்வாதிகாரியாக விளங்கினார். அவரது வீர சாகசச் செயல்களால் கவரப்பட்ட ஒரு வாலிபப்பெண் அவரை அளவில்லாமல் நேசித்து, எத்தனையோ தியாகம் செய்து, முடிவாகத் திருமணம் செய்துகொண்டாள்.
ஆனால், சில நாட்களுக்குள்ளாக உள்நாட்டு கலவரங்களும், வெளிநாட்டு கலவரங்களும் ஆரம்பித்தன. ஒரு நாள் முசோலினியின் வீடு முற்றுகையிடப்பட்டது. முசோலினியைக் கொல்ல ஒரு கொலையாளி வந்தபோது, அந்த பெண் குறுக்கே வந்து முசோலினிக்கு முன்பு நின்று அவரை மறைத்து நின்றாள். “என்னை வேண்டுமானால் கொன்று விடு, அவரைக் கொல்லாதே” என்று கதறினாள்.
அவனோ ஈவு இரக்கம் பாராட்டவில்லை. அந்த பேதைப்பெண்ணின் அன்பை மதிக்கவில்லை. அந்த கொலையாளியின் துப்பாக்கியிலிருந்து வெளி வந்த குண்டு அந்த இளம்பெண்ணில் பாய்ந்து அவளது ஜீவனை நிறுத்தினது. ஆனால் அவளுடைய அன்பை ஒன்றாலும் நிறுத்த முடியவில்லை. முசோலினியை அணைத்தபடியே அவள் மரித்தாள். இன்றைக்கும் அவளுடைய தியாகமான அன்பு, மேன்மையாக நினைவுகூரப்படுகிறது.
கர்த்தர் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்க, உங்கள்மேல் வரவேண்டிய தண்டனையை தன்மேல் ஏற்றுக்கொண்டார். உங்களுக்கு அடைக்கலமும், கேடகமுமானார். உங்கள்மேல் வரவேண்டிய தண்டனையை தன்மேல் ஏற்றுக்கொண்டது எவ்வளவு பெரிய தியாகம்! தேவபிள்ளைகளே, கர்த்தருடைய அன்பு உங்களைப் பாதுகாக்கிற அன்பு என்பதை மறந்துபோகாதீர்கள்.
நினைவிற்கு:- “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசா. 43:2).
