Appam, Appam - Tamil

மார்ச் 11 – தேவஅன்பு!

“நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோம. 5:5).

தேவனுடைய மிகச்சிறந்த குணாதிசயம் அன்பாகும். “தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவா. 4:8). அந்த அன்பு தியாகமான அன்பு, செயலாற்றும் அன்பு, மனமுவந்து கொடுக்கிற அன்பு. அந்த அன்பினால்தான் பிதா தம்முடைய ஒரே குமாரனை நமக்காகத் தந்தருளினார். அந்த அன்பினால்தான் குமாரன் நமக்காக தன்னுடைய இரத்தத்தையும் ஜீவனையுமே கொடுத்தார்.

தெய்வீக அன்பை கிரேக்க மொழி ‘அகாபே அன்பு’ என்று குறிப்பிடுகிறது. அதற்கு எதையும் எதிர்பார்க்காத தியாகமான அன்பு என்பது பொருளாகும். உலகிலுள்ள பலவிதமான அன்புகள் அனைத்திலும் கர்த்தருடைய அன்பு மேலானது. அது நம்மை ஆச்சரியப்படவைக்கக்கூடியது.

தென்அமெரிக்காவில் நான்கு கண் மீன் என்று ஒரு வகை மீன் உண்டு. இந்த மீனின் விசேஷத்திறன் என்னவென்றால் இதனால் நீர்மட்டத்திற்கு மேலுள்ள பொருள்களையும் நீர்மட்டத்திற்கு கீழே உள்ள பொருட்களையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியும். அது தண்ணீரில் நீந்தும்போது அதன் இரு கண்களின் கீழான பாதிபாகம் நீர்மட்டத்திற்குக் கீழிருக்கும். மேல் பாகத்திலுள்ள கண் பகுதியின் லென்சுக்கு வித்தியாசமான குவியத்தூரம் இருக்கும். ஆகவே, அந்தக் கண் மேலும் கீழும் பார்க்கக்கூடியதாயிருக்கிறது.

அதுபோல உங்களுடைய அன்பும் முதலாவது மேல்நோக்கி பரலோகத்திலுள்ள தேவனிடத்தில் இருக்கவேண்டும். இரண்டாவது, பூமியிலுள்ள சகோதர சகோதரிகளிடம் இருக்கவேண்டும். இரண்டு முக்கியமான பிரமாணங்களை ஆண்டவர் சொன்னார் அல்லவா? ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும், உன் முழுச் சிந்தையோடும் அன்புகூருவாயாக’ என்றும் ‘உன்னை நேசிப்பதுபோல பிறனையும் நேசிப்பாயாக’ என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

கிறிஸ்தவ மார்க்கத்தின் சிறப்பே அன்பில்தான் இருக்கிறது. நீங்கள் பாராட்டும் அன்பைக்கண்டு புறஜாதியார் கர்த்தரண்டை வருவார்கள். பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய அன்பு உங்களுடைய இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர்தான் தேவ அன்பின் ஆழங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவி செய்கிறார். தேவையற்ற, அன்பற்ற, கடினமான வார்த்தைகளினால் பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுகிறார் என்பதை எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?

சிலர் மற்றவர்களை எடுத்தெறிந்து பேசுவார்கள். ஜாதி வித்தியாசம் பார்த்து ஏளனமாய் பேசுவார்கள். ஏழைகளை தள்ளிவைத்துப் பேசுவார்கள். அப்பொழுதெல்லாம் தேவனுடைய உள்ளம் புண்படுகிறது. வேதம் சொல்லுகிறது, “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது” (எபே. 4:31).

தேவபிள்ளைகளே, “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபே. 4:32). தேவ அன்பினால் நிரப்பப்படுங்கள்.

நினைவிற்கு:- “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவா. 3:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.