Appam, Appam - Tamil

பெப்ருவரி 12 – பெரிய விசுவாசம்!

“உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜன பதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்” (ஆதி. 6:21).

நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தபடியால், நோவாவையும், அவன் குடும்பத்தையும் பாதுகாக்க பேழையைச் செய்யும்படி சொன்னார். கர்த்தருடைய கண்களில் கிருபையைப் பெற்றுக்கொள்ளுவதன் இரகசியம் அதுவே. எந்த ஒரு மனுஷன் தனக்கு ஒத்தாசை செய்கிற கன்மலையான கிறிஸ்துவைவிட்டுவிட்டு, உலக மனுஷனையும், அதிகாரிகளையும் நோக்கிப்பார்க்கிறானோ, அவனுக்கு கிருபைக்குப்பதிலாக அவமானம்தான் வந்துசேரும்.

நோவாவின் நாட்களில் எங்கும் பாவமும், அக்கிரமமும் நிறைந்திருந்தது. “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோம. 5:20). ஆம், நோவாவுக்கு கிருபையின்மேல் கிருபை கிடைத்தது.

கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அந்த தேவ கிருபையே உங்களை பூரணப்படுத்துவதுடன் நீதிமான்களாகவும், பரிசுத்தவான்களாகவும் நிலைநிறுத்தும். கிருபையின் பரிபூரணத்தைப் பெறுகிறவர்கள் “இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து, ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே” (ரோம. 5:17).

அன்றைக்கு நோவாவுக்கு மட்டுமல்ல, மிருகஜீவன்களுக்கும், பறவைகளுக்கும்கூட கிருபை கிடைத்தது. இதனால் அவைகளுக்கு பேழையிலே இடமும் கிடைத்தது. ஆகாரமும் கிடைத்தது (ஆதி. 6:21).

ஆம், ஒவ்வொரு ஜீவராசியும் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற பாரத்தை தேவன் நோவாவின் உள்ளத்தில் வைத்தார். ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவேண்டுமென்ற பாரம் ஒவ்வொரு விசுவாசிக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! இந்த பாரமிருக்கும்போது, ஜனங்களுக்காக பரிதபித்து, மன்றாடுவோம் அல்லவா?

இரவு பகலாக பேழையைச் செய்த நோவா, பிரசங்கித்த நோவா, இப்போதோ, இரவுபகலாக சகல ஜீவராசிகளுக்கும் போஜனத்தை சம்பாதித்துவைக்கலானார். ஆத்துமாக்களுக்கு வேத வார்த்தையாகிய ஜீவபோஜனத்தையும், ஜீவத்தண்ணீரையும், கொடுக்கவேண்டியது உங்கள் கடமை அல்லவா?

நோவா பெரிய செல்வந்தனாயிருந்தார் என்பதை வேதத்தில் நாம் எங்கும் வாசிக்கமுடியாது. ஆபிரகாமைப்போலவோ, அல்லது யோபுவைப்போலவோ திரளான ஆடுமாடு, ஆஸ்திகள் நோவாவுக்கு இருக்கவில்லை.

ஆனாலும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, எல்லா மிருகஜீவன்களுக்காகவும்கூட, அவைகள் உண்ணும்விதத்துக்கேற்றபடி சகலவித உணவு வகைகளையும் ஏராளமாகச் சேர்த்து வைத்தார். இங்கே நோவாவுக்கு விசுவாசம் வல்லமையாய் செயல்பட்டது. விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற வாக்குத்தத்தம் முதன்முதலாக நோவாவின் வாழ்க்கையிலேயே நிறைவேறியது.

தேவபிள்ளைகளே, உங்களுடைய எல்லாத் தேவைகளையும் கர்த்தரிடமிருந்து பெற்றுகொள்ள நீங்கள் விசுவாசத்துடன் இருப்பது அவசியம். வேதம் சொல்லுகிறது: “அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்” (யாக். 1:6). விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் (எபி. 11:6).

நினைவிற்கு:- “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு பேழையை உண்டுபண்ணினான்” (எபி. 11:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.