No products in the cart.
பிப்ரவரி 25 – பெயர் சொல்லி!
“தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்” (தானி. 6:20).
கர்த்தர் நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறவர். நாம் இவ்வுலகத்தில் பிறக்குமுன்னே தாயின் வயிற்றிலேயே அவர் நம்மை முன்குறித்து தமக்கென்று தெரிந்துகொண்டவர். அவர் நம்மைப் பெயர் சொல்லி அழைக்கும்போது நம்முடைய உள்ளமெல்லாம் பரவசமடைகிறது.
தானியேலுடைய பெற்றோர் ஒரு கருத்துள்ள பெயரை அவனுக்கு சூட்டினார்கள். தானியேல் என்ற வார்த்தைக்கு “தேவனே என் நியாயாதிபதி” என்பது அர்த்தம். அந்தப் பெயரைக் கேட்கும்போதெல்லாம் தானியேலுக்குள் ஒரு பயபக்தி ஏற்பட்டிருக்கவேண்டும். ‘என் வாழ்க்கையிலே என்னை நியாயம்விசாரிக்கிற தேவன் ஒருவர் உண்டு. பயபக்தியோடு வாழவேண்டும்’ என்ற எண்ணம் தானியேலுக்குள் உருவாகி இருந்திருக்கும்.
ஆனால், தானியேல் பாபிலோனுக்கு வந்தபோது அவனுக்கு பெல்தெஷாத்சார் என்ற பெயரைச் சூட்டினார்கள் (தானி. 1:7). இந்த வார்த்தைக்கு “பாகாலே என்னைக் காப்பாற்றும்” என்பது அர்த்தமாகும். ஆனால் அந்த புதிய பெயர் வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது.
தானியேல் தன் பெயருக்கு ஏற்றபடியே கர்த்தர்தான் நியாயாதிபதியாய் இருக்கிறார் என்பதை உணர்ந்து, மனுஷருக்கு முன்பாகவும் கர்த்தருக்கு முன்பாகவும் குற்றமற்றவராய் வாழ்ந்தார். அந்த பெயர் அவருக்குள்ளே எப்போதும் ஒரு பரிசுத்தத்தை உண்டாக்கிக்கொண்டேயிருந்தது.
தரியு ராஜா, துயரசத்தமாய், ‘தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே’ என்று தானியேலை அழைப்பதை வேதத்தில் வாசிக்கிறோம். ஜீவனுள்ள தேவனுடைய தாசனே என்று ஒரு ராஜா அழைக்கும்போது தானியேலுடைய உள்ளத்தில் எத்தனை மகிழ்ச்சி ஏற்பட்டிருந்திருக்கும்!
உங்களுடைய பெயரை உலகத்தார் கேட்கும்போது நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய தாசன் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். நீங்கள் தேவனை இடைவிடாமல் ஆராதிக்கிறவர் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுடைய பெயரை வெறுமையாக அழைக்காமல் தேவனுடைய மனிதனாகிய இன்னார் என்று அவர்கள் அழைக்கும்போது அது எத்தனை மேன்மையுள்ளதாய் இருக்கும்!
தானியேலை கர்த்தர் எப்படி அழைத்தார் என்பதை வேதத்தில் பார்க்கும்போது “பிரியமான புருஷனாகிய தானியேலே” என்று அழைத்ததைப் பார்க்கிறோம் (தானி. 10:11). இன்னொரு இடத்தில் ‘பிரியமான புருஷனே’ என்று அழைத்தார் (தானி. 10:19). இன்னொரு இடத்தில் ‘நீ மிகவும் பிரியமானவன்’ என்று சொன்னார் (தானி. 9:23). ஆ! அந்த அழைப்பு எத்தனை மேன்மையானது!
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை அன்போடு எனக்குப் பிரியமானவனே என்று அழைத்தால், அது எத்தனை இனிமையாய் இருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள். கர்த்தர் அப்படி அழைக்கும்படி அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வீர்களா?
நினைவிற்கு:- “எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்” (சங். 90:17).
