No products in the cart.
பிப்ரவரி 01 – கவலைப்படாதிருங்கள்!
“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி. 4:6,7).
கவலைப்படாதிருங்கள் என்கிற வார்த்தை வேதத்தில் நூற்றுக்கணக்கான இடத்தில் வருகிறது. நம்மை ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவுமே கவலைப்படாதிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார். மாத்திரமல்ல, நாம் கர்த்தரிலே சார்ந்துகொள்ள கற்றுக்கொள்ளும்படி கவலைப்படாதிருங்கள் என்று சொல்லுகிறார்.
கவலை என்பது எதிர்மறை வல்லமையானதும், தோல்வியின் வல்லமையானதுமாகும். கர்த்தர்மேல் விசுவாசம் வைக்காமல் சந்தேகம்கொள்ளுகிறவர்கள்தான் கவலைப்படுவார்கள். கவலைப்படுகிறவர்கள் தனக்காக வழக்காடி யுத்தம் செய்ய கர்த்தருக்கு வாய்ப்புக் கொடுக்கிறதில்லை. சற்று சிந்தித்துப்பாருங்கள்.
கவலை என்பது நாளைக்கு வரும் கஷ்டங்களை நீக்கவும், தீமையிலிருந்து விலக்கவும் உதவாது என்பதால் அதனால் ஒரு பிரயோஜனமுமில்லை. மாறாக, கவலையானது நம்முடைய ஆன்மீக பலத்தை சக்தியிழக்கச் செய்கிறது. மேலும் நாம் பெலவீனமடைவதுடன், கர்த்தரைத் துக்கப்படுத்தியும்விடுகிறோம்.
அனுபவமான ஒரு மருத்துவர் தன் நோயாளிகளைப்பற்றி ஆராய்ந்தபோது அவர்களில் நாற்பது சதவீதத்தினர் சம்பவிக்காத காரியங்களை எண்ணி கவலைப்படுகிறார்கள் என்றும், முப்பது சதவீதம்பேர் கழிந்துபோன சம்பவங்களை எண்ணி வீணாகக் கவலைப்படுகிறார்கள் என்றும், பன்னிரெண்டு சதவீதம்பேர் தங்களுக்கு ஆரோக்கியம் இருந்தும் ஆரோக்கியமில்லாததாக கற்பனைசெய்துகொண்டு கவலைப்படுகிறார்கள் என்றும், மீதி பதினெட்டு சதவீதம்பேர் கவலைப்பட அடிப்படைக் காரணமேதுமில்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கண்டுபிடித்தார்.
தேவபிள்ளைகளே, இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள். “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்” (மத். 6:27,28,31).
கவலைப்படுவதை நிறுத்துவதோடுகூட நாம் செய்யவேண்டிய இன்னும் இரண்டு காரியங்கள் உண்டு. ஸ்தோத்திரமும், ஜெபமுமே அவை. மீண்டும் அந்த வசனத்தை வாசித்துப்பாருங்கள். நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல் எல்லாவற்றையும் ஸ்தோத்திரத்தோடுகூடிய ஜெபத்தினால் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள் என்று வேதம் சொல்லுகிறது. கவலைப்படுவதை நிறுத்திவிட்டு நாம் ஜெபத்திற்குள்ளும், ஸ்தோத்திரத்திற்குள்ளும் விசுவாசத்தோடு இறங்கவேண்டும்.
ஜெபம் என்றால் என்ன? கர்த்தருடைய முகத்தைத் தேடுவதுதான் ஜெபம். கர்த்தரிடம் மனம் திறந்து கேட்பதுதான் ஜெபம். தேவபிள்ளைகளே, “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்” (1 நாளா. 16:11).
நினைவிற்கு:- “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” (எபே. 6:18).