Appam, Appam - Tamil

நவம்பர் 4 – தேவ சித்தம்!

“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக (மத். 6:10).

பரலோகத்திலுள்ள தேவதூதர்களும், கேரூபீன்களும், சேராபீன்களும் தேவனுடைய சித்தத்தைப் பூரணமாகச் செய்கிறார்கள். தேவ கட்டளையின்படி நடப்பது அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சி. நம்மைக்குறித்து கர்த்தருடைய விருப்பம் என்ன? பரலோகத்தில் பிதாவின் சித்தம் பூரணமாய் நிறைவேற்றப்படுவதுபோல பூமியிலேயும் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான்.

ஆனால் பொதுவாக பூமியிலே இருக்கும் நிலைமை என்ன? கர்த்தர் மனுஷனுக்கு சுய சித்தத்தைக் கொடுக்கிறபடியினால், தன்னுடைய சுய ஞானம், சுய அறிவை பயன்படுத்தி மனம்போன போக்கிலே போக மனுஷன் விரும்புகிறான். உலக உல்லாசங்கள் அவனை கவர்ந்து இழுக்கின்றன. மனமும், மாம்சமும் விரும்பினதைச் செய்யும்படி விரைந்து செயல்படுகிறான்.

“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசா. 55:8,9).

ஒவ்வொரு கிறிஸ்தவன்மேலும் கர்த்தர் வைத்திருக்கிற எதிர்பார்ப்பு அவன் தன்னுடைய சுய விருப்பத்தின்படி நடவாமல், சுய இச்சைகளின்படி நடந்து திரியாமல் கர்த்தருடைய சித்தத்தின்படியே நடக்கவேண்டும் என்பதுதான். ஒரு மனிதன் தன்னைக்குறித்து தேவனுடைய நோக்கம் என்ன, அநாதி தீர்மானம் என்ன, தேவன் தன்னுடைய மனதிலே என்ன நினைக்கிறார் என்பதையெல்லாம் அறிந்து செயல்படும்பொழுது அவனது வாழ்க்கை மேன்மையான வாழ்க்கையாக திகழ்கிறது. அதற்குப் பரலோக ஞானம் தேவை. பரலோக அறிவு தேவை.

அப். பவுல், “நீங்கள் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” (எபே. 5:17) என்றும், “நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் …. உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்” (கொலோ. 1:9,11) என்றும் எழுதுகிறார்.

தேவனுடைய உண்மையான மனுஷன் யார்? பிரசங்கிக்கிறவர்கள் எல்லாம் தேவ மனுஷராகிவிட முடியாது. வியாதியஸ்தர்கள் சுகம் பெறுகிறதினாலோ, அற்புதங்கள் நடைபெறுகிறதினாலோ ஒருவன் தேவ மனுஷனாகிவிட முடியாது. உண்மையான தேவ மனுஷன் எப்பொழுதும் தேவனோடுகூட நடக்கவேண்டும், தேவனோடு சம்பாஷிக்கவேண்டும், தேவனுடைய சித்தத்தை அறிகிறவனாய் இருக்கவேண்டும். அவன் தேவனுடைய திட்டத்தை அறிந்து, அந்த வழியில் செல்லுகிறதினால் அவனுடைய உள்ளத்தில் பூரணமான சமாதானம், பூரண மன நிறைவு நிலவுவதுடன் அவனுடைய வாழ்க்கை முழுவதுமே ஆசீர்வாதமாயிருக்கும்.

தேவபிள்ளைகளே, இயேசுகிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். அவர் எப்பொழுதும் பிதாவின் சித்தத்தை அறிந்து செயல்படுவதற்கு கவனமுடையவராய் இருந்தார். அவர் மனுஷரைப் பிரியப்படுத்தி ஊழியம் செய்யாமல் எப்பொழுதும் தேவனைப் பிரியப்படுத்தியே ஊழியம் செய்தார்.

நினைவிற்கு:- “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோம. 8:28).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.