No products in the cart.
நவம்பர் 27 – கடினமான உபதேசம்!
“இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்” (யோவா. 6:60).
எளிதான உபதேசங்களும் உண்டு. கடினமான உபதேசங்களும் உண்டு. இரண்டுமே நமக்கு பிரயோஜனமானவைகள்தான். இயேசு சுகமாக்குகிறார், இயேசு அற்புதம் செய்கிறார், இயேசு விடுவிக்கிறார், இயேசு கண்ணீரைத் துடைக்கிறார் என்கிற உபதேசங்களெல்லாம் எளிதான உபதேசங்கள்.
அதேநேரம் “ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் என்னைப் பின்பற்றக்கடவன்” என்றும் “இடுக்கமான வாசல்கள் வழியாக உட்பிரவேசியுங்கள்” என்றும் இயேசுவானவர் சொல்லும்போது, அதைக் கடினமான உபதேசம் என்று சொல்லுகிறோம். கர்த்தர் நமக்காக என்னென்ன செய்கிறார் என்பதையும், செய்யப்போகிறார் என்பதையும் கேட்கும்போது, நம்முடைய இருதயம் மகிழுகிறது. அது சந்தோஷமான உபதேசமாய் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஆண்டவருக்காக என்ன செய்யவேண்டும் என்று சொல்லும்போது, அது கடினமானதாய் தோன்றுகிறது.
மோசே நியாயப்பிரமாண உபதேசத்தைக் கொண்டுவந்தார். இயேசுவோ கிருபையின் பிரமாண உபதேசங்களைக் கொண்டுவந்தார். இந்த இரண்டில் கடைப்பிடிப்பதற்கு கடினமானது எது? நியாயப்பிரமாணமா அல்லது கிருபையின் பிரமாணமா?
நியாயப்பிரமாணம் விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்று சொல்லுகிறது. ஆனால் இயேசு இதை எளிதாக்காமல் இன்னும் கடினமாக்கினார். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்திலே அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்று அவர் சொன்னார். இது எத்தனையோ மடங்கு கடினமான உபதேசம். பழைய ஏற்பாட்டில் விபச்சார செயலுக்குத்தான் தண்டனை. புதிய ஏற்பாட்டிலோ விபச்சார எண்ணத்திற்கே தண்டனை.
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஜீவனுக்கு ஜீவன் என்பது பழைய ஏற்பாட்டு உபதேசம். ஆனால் உன் வலது கன்னத்தில் அறைகிறவனுக்கு இடது கன்னத்தையும் காட்டு என்பது புதிய ஏற்பாட்டு உபதேசம். இது எத்தனை கடினமானது! இயேசு கடினமான உபதேசத்தை பிரசங்கித்தபோது, அவருடைய சீஷர்களில் அநேகர் அவருடனே நடவாமல் பின்வாங்கிப்போனார்கள் என்று யோவான். 6:66லே வாசிக்கிறோம்.
அப். பவுலின் ஊழியத்திலே கடினமான போராட்டங்களும், பிரச்சனைகளும் வந்தன. ஆனாலும் அவர் “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? …. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” என்று எழுதுகிறார் (ரோம. 8:36,39).
தேவபிள்ளைகளே, உண்மையாய் கர்த்தரை நேசிக்கிறவர்களுக்கு அவருடைய அன்பினிமித்தம் ஒன்றும் கடினமாகத் தெரிவதில்லை. எந்தக் கடினமும் அவருடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கவே முடியாது.
நினைவிற்கு:- “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்” (மத். 7:13).