நவம்பர் 22 – மாய்மாலம்!
“குருடனான பரிசேயனே! போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு” (மத். 23:26).
ஒரு போஜன பாத்திரமானது வெளிப்புறத்தில் சுத்தமாயிருப்பதைவிட உட்புறம் சுத்தமாயிருப்பது மிகவும் அவசியம். அநேகர் வெளிப்புறத்தைமாத்திரம் சுத்தப்படுத்திக்கொண்டு கவர்ச்சியாக தோற்றமளிக்கிறார்கள். கர்த்தரோ, உட்புறத்தையே பார்க்கிறவர். உள்ளான பரிசுத்தத்தையே எதிர்பார்க்கிறவர்.
மாய்மாலக்காரரை, “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை” என்று இயேசு அழைத்தார். வெளியே பார்க்க அழகான தோற்றம். உள்ளேயோ அருவருப்பு. எலும்பு, துர்நாற்றம் ஆகியவற்றை மூடி வைத்துவிட்டு வெளிப்புறத்தைமட்டும் வெண்மையாக்கி, பளிங்குக் கற்கள் பதித்து தூய்மையான தோற்றமாக்கிவிடுகிறார்கள்.
அப்படித்தான் பரிசேயர்களும், சதுசேயர்களும், வேதபாரகர்களும் மனுஷர் பார்வையிலே தங்களை பக்திமான்களைப்போல காண்பித்து நடித்துக்கொண்டிருந்தார்கள். கர்த்தரோ, அவர்களுடைய முகத்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்துவிடவில்லை. “குருடனான பரிசேயனே, குருடருக்கு வழி காட்டிகளான குருடர்களே” என்று அவர்களை வேதனையுடன் அழைத்தார்.
ஒரு பள்ளி மாணவன் ஒரு கடையை உடைத்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டான். வெளித்தோற்றத்தில் அவன் நல்ல பையன்தான். கண்ணியம்மிக்க ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவன்தான். அவன் திருடவேண்டும் என்பதற்காகவோ, பணத்தின் மீது ஆசைப்பட்டோ அந்தக் காரியத்தைச் செய்யவில்லை.
பல திறமை மிக்க ஆலோசனைக்காரர்கள் அவனிடம் உரையாடி அவனைக்குறித்து ஆராய்ந்தபோது, அவன் சொன்னான், “நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குள்ளே இருந்த ஒரு வெறுப்பு உணர்ச்சியே இதற்குக் காரணம். திடீரென்று என்னுடைய பெற்றோர் நீ இனி கால்பந்து விளையாடப் போகக்கூடாது. உன் சிநேகிதர்களோடு சேரக்கூடாது என்று கண்டிப்பாக தடை விதித்தார்கள். அது என் மன நிலையைப் பாதித்தது. என் வெறுப்பு உணர்வை மனதிலே அடக்கிக்கொள்ளாமல் என் வேதனையை அவர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களுடைய மனதைப் புண்படுத்தவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நடந்துகொண்டேன்” என்றான்.
கிறிஸ்தவ வாழ்க்கையில் எண்ணங்கள், சிந்தனைகள், யோசனைகள் என ஒரு பகுதியும், செயல்முறை என மற்றொரு பகுதியுமுண்டு. எண்ணங்களில் பரிசுத்தம் இருக்குமானால் செயல்களிலும் பரிசுத்தம் விளங்கும். ஒரு மரத்தின் வேர்கள் பரிசுத்தமாயிருந்தால் அதன் கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
பரிசுத்தத்தைப் பொறுத்தமட்டில், உள்ளான பரிசுத்தத்திற்கு நாம் மிகமிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதற்காக வெளியரங்கமான பரிசுத்தத்தில் கவனம் வைக்கக்கூடாது என்பதல்ல, உள்ளும் புறமும் பரிசுத்தமாயிருக்கவேண்டும் என்பதுதான் கர்த்தருடைய குறிக்கோள். வெளித்தோற்றத்திலும்கூட கர்த்தருடைய சாயலை நாம் பிரதிபலிக்கவேண்டும். வெளித்தோற்றமும் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்காதபடி நம்முடைய பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைப் பார்க்க விரும்புகிறார். அது தூய்மையாய் இருக்கிறதா? கர்த்தர் எதிர்பார்க்கிற பரிசுத்தம் உங்களில் காணப்படுகிறதா?
நினைவிற்கு:- “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக” (சங். 19:14).
